தாகமாயிருக்கிறேன்!
" மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங். 42:1).
தாவீது கர்த்தர் மேல் தான் வைத்த தாகத்தையும், வாஞ்சையையும் "மானுக்கு" ஒப்பிட்டு, "மான்கள் நீரோடையை வாஞ்சித்துக் கதறுவதைப்போல..., என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது" (சங். 42:2) என்று குறிப்பிடுகிறார்.
எல்லா மிருகங்களைப் பார்க்கிலும், மான்களுக்கு நீரோடைகளைக் கண்டுபிடிக்கும் விசேஷித்த குணாதிசயமுண்டு. மான்கள் மோப்ப சக்தியினால் தண்ணீர் வாசனையை கண்டுபிடித்து, அந்த திசையை நோக்கி ஓடிச்செல்லும். செல்லுகிற வழியிலெல்லாம் அது கதறிக்கொண்டு, தன் வாஞ்சையை வெளிப்படுத்திக் கொண்டே செல்லும். நீரோடையின் தண்ணீரை தவிர வேறு ஒன்றும் அதன் தாகத்தை தீர்ப்பதில்லை; திருப்திப்படுத்துவதுமில்லை.
பாருங்கள்! ஒரு சிங்கம் அல்லது கரடிக்கு தாகமெடுத்தால், ஏதாவது ஒரு காட்டு மிருகத்தை அடித்து, அதனுடைய இரத்தத்தைக் குடித்து தன் தாகத்தை தீர்த்துக்கொள்ளும். ஆனால் இந்த மான்கள் இரத்தம் குடித்தோ அல்லது வேறுவிதத்திலோ தன்னுடைய தாகத்தை தீர்த்துக்கொள்ளாமல், தேங்குகிற அழுக்குத் தண்ணீரையும் விரும்பாமல், நீரோடையிலுள்ள புதிய தூய்மையான தண்ணீரையே வாஞ்சித்து போய் அருந்துகின்றன.
உலகத்தார் தங்களுடைய தாகங்களை பணம், செல்வம், இன்னும் உலக நண்பர்களின் ஐக்கியம், குடிகள், வெறிகள், சூதாட்டங்கள், சினிமாக்கள், நாடகங்கள் போன்ற வழிகளில் சென்று தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். உண்மையில் பார்க்கப்போனால் அவை அவர்களுடைய தாகத்தை அதிகப்படுத்துமே தவிர தீர்ப்பதில்லை.
ஆனால் உங்களுடைய தாகத்தைத் தீர்க்கிறவர் இயேசு ஒருவர்தான். தாவீது, "என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது" என்று குறிப்பிடுகிறார். ஆம், அவர் ஒருவரே உங்களுடைய ஆவிக்குரிய தாகத்தைத் தீர்க்கிறவர். "கர்த்தாவே, நீர் எனக்கு போதும், நீரே என் பங்கு. உம்முடைய பிரசன்னமே எனக்கு தேவை. நீரே என் உள்ளத்தை நிரப்பி ஆறுதல்படுத்தும்" என்று தாகத்தோடு, வாஞ்சையோடு கேட்கும்போது, கர்த்தர் நிச்சயமாகவே வாஞ்சையையும், தாகத்தையும் தீர்ப்பார்.
சங்கீத புத்தகத்திலே, தாவீது தான் தேவன் மேல் வைத்த தாகத்தை எத்தனை விதங்களில் வெளிப்படுத்துகிறார் என்பதைக் கவனித்துப் பாருங்கள். அவர் சொல்லுகிறார், "கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன், நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்" (சங். 27:4). ஆம், இது கர்த்தருடைய மகிமையின் மேலுள்ள ஒரு தாகத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் மேலுள்ள தாகத்தையும் வெளிப்படுத்துகிறது.
தாவீதுக்கு கர்த்தர்மேல் மாத்திரமல்ல, அவருடைய வசனங்களின் மேலும் அளவற்ற தாகம் இருந்தது. அவர் எழுதுகிறார், "உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்" (சங். 119:131).
நினைவிற்கு:- "என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்" (ஏசா.26:9).