சேலா!
"சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)" (சங். 46:7).
இந்த வசனத்தின் முடிவிலே "சேலா" என்ற ஒரு பதம் வருவதை சற்று கவனித்துப் பாருங்கள். "சேலா" என்னும் சொல் 40 சங்கீதங்களில் 71 முறையும், ஆபகூக் 3-ம் அதிகாரத்தில் 3 முறையும் காணப்படுகிறது. சேலா என்பது, அடைப்புக்குறிக்குள் போடப்பட்டிருப்பதினாலே அநேகர் அதை முக்கியமான வார்த்தையாக எண்ணுவதில்லை வேதாகமத்தின் பல புதிய பதிப்புகளிலும் இவ்வார்த்தை விடுபட்டுவிட்டது.
உங்களுடைய வாழ்க்கையிலும் "சேலா"வைப்போல அறியப்படாத பல சம்பவங்கள் கடந்து வருகின்றன. வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு நீங்கள் விடை தெரியாமல், ஏன் ஏன் என்று தடுமாறுகிறீர்கள். "இப்பொழுது அறியாய்; இனி மேல் அறிவாய்" என்று கர்த்தர் சொல்லுகிறதுதான் ஞாபகம் வருகிறது. சரி, "சேலா" என்பதைக்குறித்து மூன்று முக்கியமான கருத்துக்கள் விளங்குகின்றன. அவற்றை தியானிப்போமா?
முதலாவது, சேலா என்றால் "எழும்பிப் பாடு; கெம்பீரமாய்ப் பாடு" என்பது அர்த்தம். ‘சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்’ என்று சொல்லிவிட்டு, கூடவே "சேலா" என்று எழுதப்பட்டிருக்கிறது. உங்களுக்கு அடைக்கலமாயிருக்கிற சேனைகளின் கர்த்தரைக் குறித்து பாடும்போது, மெதுவாக, சாதாரணமாக பாட இயலாது. அந்தப் பகுதியை நீங்கள் சத்தத்தை உயர்த்தி கெம்பீரமாய்ப் பாட வேண்டியது அவசியமாயிருக்கிறது.
இரண்டாவது, சேலா என்ற பதத்திற்கு "சுருதி மாற்றிப் பாடு" என்பது அர்த்தமாகும்! இராகத் தலைவன் சங்கீதம் இசைக்கும்போது, குறிப்பிட்ட இடத்தில், அவன் பாட்டுப் பாடுகிற மற்ற எல்லா சங்கீதக்காரர்களிடமும், "சேலா" என்று சொல்லுவான். உடனே அவர்கள் வேறே சுருதியில் உயர்த்திப் பாடுவார்கள். சங்கீதம் 24-ஐ வாசிக்கும்போது "இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி" என்று சொல்லிவிட்டு உடனடியாக, "சேலா" என்கிற வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் அவர்கள் சுருதி மாற்றி, "வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்" என்று சொல்லி பாடுவார்கள்.
மூன்றாவது, "சேலா" என்பதற்கு "சற்று நிறுத்து" என்பது அர்த்தமாகும். சங்கீதக்காரர்கள் பாடிக்கொண்டே வரும்போது சில வேளைகளில் உயர்த்துவார்கள், சில வேளைகளில் சுருதியை மாற்றுவார்கள், இன்னும் சில வேளைகளில் முன் சற்று நிறுத்தி இடைவெளி விட்டு, மீண்டும் தொடருவார்கள். உதாரணமாக, சங்கீதம் 37:7-ல் ‘கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு‘ என்று சொல்லிவிட்டு, ‘காத்திரு’ என்ற பதத்திற்கு முன் சற்று நிறுத்தி காத்திருப்பார்கள். அதன் பின்பு அடுத்த அடி தொடங்கும்போது மீண்டும் உற்சாகமாய் ஒன்றுபோல சேர்ந்து பாடுவார்கள்.
தேவபிள்ளைகளே, சங்கீதக்காரன் உயர்த்திப் பாடச் சொல்லும்போது உயர்த்தியும், சுருதியை மாற்றச் சொல்லும்போது மாற்றியும், சற்று நிறுத்தச் சொல்லும்போது நிறுத்தியும் பாடும்படி பாடுகிறவர்களுடைய கண்கள் காத்திருப்பதைப்போல கர்த்தருடைய சித்தத்தின்படி செய்ய உங்கள் உள்ளமும், மனமும் எப்போதும் காத்திருக்கட்டும்.
நினைவிற்கு:- "சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர் (சேலா)" (சங். 60:4).