என்னை நோக்கிக் கூப்பிடு!
"ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்" (சங். 50:15).
"நான் உன்னை விடுவிப்பேன்" என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம். எந்த சூழ்நிலையானாலும், எந்த ஆபத்தானாலும் நான் உன்னை விடுவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவரை நோக்கி கூப்பிடுவதேயாகும்.
ஒருமுறை லாரி டிரைவர் ஒருவர், இரவு வேளையில் உயரமான ஒரு மலை உச்சியில் தனது லாரியை ஓட்டிக்கொண்டு போனார். நீண்ட பிரயாணம் செய்ததினால் களைப்புற்றிருந்த அவர் மலைச்சரிவின் வளைவான பகுதியில் சென்றபோது தன்னையறியாமல் அயர்ந்து ஒரு சில வினாடி கண்ணை மூடிவிட்டார். அதற்குள் லாரி பாதையிலிருந்து விலகி அகால பாதாளத்திற்குள் இறங்க ஆரம்பித்தது. பெரிய டயர்களின் தட தட என்ற சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்ட அவர், தனக்கு முன்னாலிருந்த ஆபத்தை இமைப்பொழுதில் உணர்ந்தார். இனி எந்த விதத்திலும் தன்னால் லாரியை காப்பாற்ற முடியாது என்று உணர்ந்த அவர் முழு பெலத்தோடுகூட "இயேசுவே" என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்.
அவர் அப்படி கூப்பிட்ட வேளையில் கர்த்தருடைய மென்மையான கரம் அந்த ஸ்டியரிங்மேல் அமர்ந்து அதை திருப்பி மீண்டும் சரியான பாதையில் கொண்டுவந்து நிறுத்தியது. கர்த்தருடைய பிரகாசமான கரத்தைக் கண்ட அவர் ஒரு பக்கம் சந்தோஷமும் மறுபக்கம் பயபக்தியும் நிறைந்தவராய்க் கர்த்தரைத் துதித்தார். லாரியை நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கி, கர்த்தருக்கு நன்றி செலுத்தி அவரை ஸ்தோத்தரித்தார்.
வேதம் சொல்லுகிறது: "தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்" (சங். 107:13). தாவீது தன் வாழ்க்கையில் எத்தனையோ ஆபத்துக்களையும், போராட்டங்களையும் சந்தித்தார். கர்த்தர் அவரை ஒருபோதும் கைவிடவேயில்லை. அவருடைய வாழ்க்கை முழுவதும், கர்த்தர் அவரை விடுவித்த சாட்சிகளால் நிரம்பியிருக்கிறது. அவர் சொல்லுகிறார், "என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்." (சங். 18:17-19).
தேவபிள்ளைகளே, அந்த ஆண்டவர் உங்களுடைய தேவனாகவுமிருக்கிறார். இன்று அவர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்து உங்களைத் தேற்ற விரும்புகிறார். கர்த்தர் சொல்லுகிறார், "தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன். நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்" (ஏசா. 46:3,4).
தேவபிள்ளைகளே, கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் முடிவுபரியந்தமும் ஜெயமாய் உங்களை நடத்துவார்.
நினைவிற்கு:- "தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார்" (தானி. 6:27).