தேவனுக்கு மகிமையுண்டாவதாக!

"...தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக" (சங். 70:4).

ராஜாக்களுக்கு என ஒரு மேன்மையுண்டு; ராஜாதி ராஜாவுக்கு என அதிகமான மகிமையுண்டு! உங்களால் கர்த்தர் மகிமைப்படுகிறாரா அல்லது தூஷிக்கப்படுகிறாரா?

சில பிள்ளைகள் பெற்றோருக்கு புகழையும், கீர்த்தியையும் தேடிக்கொண்டு வருவார்கள். சில பிள்ளைகளோ அவமானத்தையும், தலை குனிவையும் கொண்டு வருவார்கள். சில மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பெருமை தேடித் தருவார்கள். சிலர் ஆசிரியர்களின் பெருமைகளை நாசமாக்கிவிடுவார்கள்.

சில வீரர்கள் தேசத்திற்கு வெற்றியைக் குவிப்பார்கள்; சிலரோ காட்டிக் கொடுக்கும் ஈனச் செயலில் ஈடுபடுவார்கள். நீங்கள்  நமது ராஜாதி ராஜாவுடைய நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வருகிறவர்களாக இருக்கிறீர்களா?

சிலர் பிரசங்கத்தின் இடையிலே அடிக்கடி, "தேவனுக்கு மகிமையுண்டாவதாக" என்று சொல்லுவார்கள். சங்கீதக்காரன் "உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக" (சங். 70:4) என்று எழுதுகிறார்.

நீங்கள் மகிமையுண்டாவதாக என்று சொல்லுவதோடல்லாமல், அவரை மகிமைப்படுத்துகிறவர்களாகவும், உயர்த்தி மேன்மைப்படுத்துகிறவர்களாகவும் விளங்கவேண்டும். எந்தவிதத்திலும் உங்களுடைய வாழ்க்கையின் மூலமாக கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்பட இடம் கொடுக்கவே கூடாது.

கர்த்தர் உங்களை சிருஷ்டித்ததும், உங்களுக்காக இரத்தம் சிந்தினதும், உங்களை அபிஷேகித்ததும், அவருடைய நாமத்தின் மகிமைக்காக அல்லவா? கர்த்தர் சொல்லுகிறார்: "நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டு வா என்பேன்" (ஏசா. 43:7).

யோசேப்பு பாவம் செய்யாமல் தன்னைக் காத்துக்கொண்டதின் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் நேபுகாத்நேச்சார் உருவாக்கிய சிலையை பணிந்து கொள்ளாததின் நிமித்தம், கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. தானியேலை சிங்கக்கெபியிலே போட்ட போதிலும் அவன் கர்த்தருக்காக நின்றபடியினால் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது.

தேவபிள்ளைகளே, உங்களுடைய அலுவலகத்திலே நீங்கள் சாட்சியுள்ள ஜீவியத்தை மேற்கொண்டால், கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதற்கு அது ஏதுவாயிருக்கும். மற்றவர்களைப் போல நீங்கள் லஞ்சம் வாங்காமல் உண்மையுள்ளவர்களாயிருக்கும்போது கர்த்தருடைய நாமம் மகிமைப்படும். முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து, கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் உறுதிப்படுத்தும் போது கர்த்தருடைய நாமம் மகிமைப்படும்.

அப். பவுல் சொல்லுகிறார்: "கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்" (1 கொரி. 6:20).

நினைவிற்கு:- "நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்" (1 கொரி. 10:31).