வல்லமையை விளங்கப்பண்ணுதல்!

"அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணினீர்" (சங். 77:14).

மனுஷன் தேவனை மறந்து, தன்னுடைய சுய வல்லமையைப் பிரஸ்தாபப்படுத்த எண்ணுகிறான். தன் சுயபெலத்தினால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நினைக்கிறான். அதனால்தான் அவன் ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது. ஆதியிலே ஜனங்கள் தங்களுக்கு பேர், புகழ் உண்டாக்க, வானளாவும் சிகரமுள்ள பாபேல் கோபுரத்தைக் கட்ட முயற்சித்தார்கள். தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று எண்ணினார்கள். அப்போது கர்ததருடைய வல்லமை குறுக்கிட்டது. கர்த்தர் அவர்களுடைய பாஷைகளைத் தாறுமாறாக்கினார். அவர்கள் பூமியெங்கும் சிதறிப் போனார்கள் (ஆதி. 11:1-9).

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ என்ற பெரிய பட்டணத்தில் பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பட்டணமே தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. பெரிய பெரிய கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. ஒரே நாளிலே அந்த பெரிய பட்டணம் தன் மகிமையையும், சீரும், சிறப்பையும் இழந்து குப்பை மேடாய் காட்சியளித்தது.

ஜனங்களெல்லாம் சிதறிக் கிடந்த அந்த வீதிகளைப் பார்த்துக் கொண்டு நின்றபோது, அங்கே தினசரி பத்திரிக்கை போடுகிற கிறிஸ்தவ சிறுவன் ஒருவன் அவர்களைப் பார்த்து, "மனிதன் கர்த்தருடைய வல்லமையை ஒருபோதும் மேற்கொள்ளவே முடியாது. இந்த பெரிய பட்டணத்தைக் கட்ட மனுஷனுக்கு பல நூறு ஆண்டுகளாயின. ஜனங்கள் அதை வைத்து பெருமை பாராட்டிக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் கர்த்தரோ, ஒரு சிறிய பூமியதிர்ச்சியின் மூலமாய் அவைகளை நொறுங்கிக் கீழே விழும்படிச் செய்தார். மனிதனே, நீ ஒருபோதும் தேவனை விட பெரியவனல்ல; விஞ்ஞானிகளே, நீங்கள் ஒருபோதும் கர்த்தரை விட வல்லமையுள்ளவர்கள் அல்ல" என்றான்.

மனிதனின் வல்லமை காலத்தால் அழிந்துபோகும். ஆனால் கர்த்தருடைய வல்லமையோ என்றென்றைக்கும் நிலை நிற்கும். எந்த மனுஷனும் தன்னுடைய வல்லமையைக் கொண்டு கர்த்தருக்குச் சவால்கொடுக்க முடியாது. கர்த்தர் அந்த சவால்களை தமது வல்லமையினால் உடைத்தெறிவார்.

ஒருமுறை ஒரு பொதுக்கூட்டத்திலே இரண்டு நாத்திகர்கள், நின்று கர்த்தரை மிகவும் தூஷித்தார்கள். ஒருவன் தன் துப்பாக்கியை எடுத்து "இதோ நான் கிறிஸ்தவர்களின் தெய்வத்தை சுட்டு வீழ்த்தப் போகிறேன்" என்று சொல்லி வானத்தை நோக்கிச் சுட்டான். "கர்த்தர் இருந்தால் அவர் என்னைக் கொன்று போடட்டுமே, இறங்கி வரட்டுமே பார்க்கலாம்" என்றான். அடுத்தவன், "நான் அவரை உதைத்து விட்டேன்" என்று பெருமையடித்துக் கொண்டான். சில நிமிடங்களுக்குள்ளாக பலத்த இடி முழக்கங்களும், மின்னல்களும் வந்தன. கர்த்தருக்கு விரோதமாகச் சவால் கொடுத்த முதல் ஆள் மின்னலினால் தாக்குண்டு மரித்தான். அடுத்தவன், தப்பியோட முயற்சித்தபோது இடறி விழுந்து, கால்கள் முறிந்து இரண்டு கால்களையும் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானான்.

கர்த்தரை எதிர்த்து நிற்க யாராலும் கூடாது. கர்த்தருடைய வல்லமை பெரியது.  தேவபிள்ளைகளே, நீங்கள்  எப்போதும் தேவ பக்தியுள்ளவர்களாய் உங்களைத் தாழ்த்தி கர்த்தருக்கு முன்பாக தாழ்மையோடு விளங்குவீர்களாக.

நினைவிற்கு:- "கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்" (சங். 71:16).