பரலோக மன்னா!

"தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்" (சங். 78:25).

கர்த்தர் தூதர்களின் அப்பத்தை எடுத்து, இஸ்ரவேலருக்கு அப்பமாகக் கொடுத்தார். இரண்டுபேரின் உணவையும் ஒரே உணவாய் மாற்றிவிட்டார். அப்படியானால், இந்த மன்னா எப்படிப்பட்டது? மன்னாவை புசிக்க வேண்டுமென்றால் நீங்கள் எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டும்? தூதர்களுடைய மன்னா என்பது கர்த்தருடைய சமுகம்தான். வேதம் சொல்லுகிறது, "இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்" (மத். 18:10). 

முதலாவது, தூதர்கள் கர்த்தருடைய சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறவர்கள். தேவ சமுகம் உங்களுக்கு அப்பமாய் மாற வேண்டுமென்றால், நீங்கள் எப்போதும் தேவ சமுகத்தை வாஞ்சிக்கிறவர்களாகவும், தேவ சமுகத்தை நோக்கி ஓடுகிறவர்களாகவும் இருக்கவேண்டும். 

பழைய ஏற்பாட்டில் ஏனோக்கு, நோவா போன்ற பரிசுத்தவான்களின் வாழ்க்கைக் குறிப்புகளை வாசித்துப் பாருங்கள். அவர்களுடைய வாழ்க்கையின் மேன்மை என்ன? அவர்கள் தேவ சமுகத்தை எப்போதும் உணர்ந்தவர்களாய், தேவனோடு சஞ்சரிக்கிறவர்களாய் வாழ்ந்தார்கள். கர்த்தருடைய சமுகமும், அவருடைய பிரசன்னமும் உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அருமையான மன்னாவாக விளங்கும்.

இரண்டாவது, தூதர்கள் பரிசுத்தமானவர்கள் (மாற். 8:38). பரிசுத்தமானது, அவர்களுக்கு மன்னாவாக விளங்கியது. நீங்கள் இந்த தூதர்களின் அப்பத்தை புசிக்க வேண்டுமானால், பரிசுத்தமாயிருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப். பவுல், "...சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது" (1 கொரி. 5:11) என்று எழுதுகிறார். 

நீங்கள் பரிசுத்தத்தைக் காக்கிறது மாத்திரமல்ல, அசுத்தத்திலிருந்தும், அசுத்தத்தை நடப்பிக்கிற துன்மார்க்கத்திலிருந்தும் வேறுபட்டவர்களாய்க் காணப்படவேண்டும். பரிசுத்தமான தேவ தூதர்கள், பரிசுத்தமான தேவனை ‘பரிசுத்தர் பரிசுத்தர்’ என்று போற்றித் துதிக்கிறார்கள் அல்லவா? அதுபோலவே பரிசுத்த பிரசன்னத்தை உணர்ந்து நீங்களும் தேவனைப் போற்றித் துதிப்பீர்களாக.

மூன்றாவதாக, தேவதூதர்கள் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்கள். பணிவிடைசெய்வதே அவர்களுக்கு ஆகாரமாயிருக்கிறது. நீங்கள் பரலோக மன்னாவை புசிக்க வேண்டுமென்றால் கர்த்தருக்கு பணிவிடை செய்கிறவர்களாக, கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்களாக விளங்க வேண்டும். நீங்கள் அடிமைகளைப்போல அல்ல, வேலைக்காரனைப்போல அல்ல, தகப்பன் பணியை மகன் முழு இருதயத்தோடு செய்வதைப்போல  செய்ய அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். 

தேவபிள்ளைகளே, பரலோக தேவதூதர்களின் மன்னாவை கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருப்பது எத்தனை பெரிய பாக்கியம்! கர்த்தர் உங்களை ஆவிக்குரிய ஜீவியத்தில் தூதர்களைப் போல வளரச் செய்வது எத்தனை மேன்மையான காரியம்!

நினைவிற்கு:- "நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்" (யோவான் 6:51).