ஆண்டவரின் பிரியம்!
"எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக" (சங். 90:17).
தேவமனுஷனாகிய மோசேயின் ஜெபம் சங்கீத புஸ்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. 90-ம் சங்கீதத்தின் கடைசி பகுதியில், மோசே, "எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக" என்று உள்ளம் உருகி ஜெபிக்கிறார்.
நீங்கள் பிள்ளைகளுக்குப் பிரியமானதை வாங்கிக் கொடுக்க விரும்புகிறீர்கள். கணவனுக்குப் பிரியமான சமையல் எது என்பது மனைவிக்குத் தெரியும். மனைவியைப் பிரியப்படுத்த எந்த சேலையை வாங்கிக் கொடுக்கலாம் என்பது கணவனுக்குத் தெரியும். உலக வாழ்க்கையே ஒருவரையொருவர் பிரியப்படுத்தி வாழுவதுதான்.
ஆனால் உங்களுக்காக ஜீவனைத் தந்த தேவனைப் பிரியப்படுத்தவும், அவருடைய பிரியத்தைப் பெற்றுக்கொள்ளவும், ஏற்ற வகையில் உங்கள் இருதயத்தை பக்குவப்படுத்தியிருக்கிறீர்களா? அநேக வேளைகளில் மனுஷரைப் பிரியப்படுத்தி கர்த்தரைத் துக்கப்படுத்தியிருக்கிறீர்கள் அல்லவா? நண்பர்களைப் பிரியப்படுத்த எண்ணி அவர்களோடு உலகப்பிரகாரமான இச்சைகளில் ஈடுபட்டு, கர்த்தரை வேதனைப்படுத்தியிருக்கிறீர்கள் அல்லவா? நாகரீகம் என்ற போர்வையில் மனசாட்சியை மழுங்கடித்து, பல பாவங்களுக்குள் பிரவேசித்து ஆண்டவரை புறக்கணித்திருக்கிறீர்கள் அல்லவா?
தாவீது சொல்லுகிறார், "உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்" (சங். 143:10). முதலாவது, உங்கள் உள்ளத்தில் அப்படிப்பட்ட ஒரு ஜெபம் எழும்பட்டும். உங்களைத் தாழ்த்தி, "ஆண்டவரே, உம்மை அதிகமாய் நேசிக்கும்படி, உமக்கு இன்னும் அதிகப் பிரியமாய் நடந்து கொள்ளும்படி எனக்கு உதவி செய்யும்" என்று மன்றாடுங்கள்.
இரண்டாவது, உங்கள் ஒவ்வொரு செயலையும் தேவசமுகத்திலே சீர்தூக்கிப் பாருங்கள். "இந்த செயலின்மேல் கர்த்தர் பிரியமாயிருப்பாரா? இந்த இடத்திற்குச் செல்லுகிறேன். கர்த்தர் என்னோடுகூட வருவாரா? என் சம்பாஷணைகளெல்லாம் அவர் பிரியப்படும் வகையில் உள்ளனவா" என்று நிதானித்துப் பாருங்கள். உங்கள் மனசாட்சியே அதற்குப் பதில் சொல்லிவிடும். கர்த்தரைத் துக்கப்படுத்துகிற எந்தச் செயலையும் செய்யாதேயுங்கள்.
மூன்றாவது, அப். பவுல் சொல்லுகிறார், "கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்" (எபே. 5:10). வாழ்க்கையின் அனுபவங்களும், வேத வசனங்களும் அதை உங்களுக்கு அறிவிக்கும். தேவ ஊழியர்கள் அதை உங்களுக்குப் போதிப்பார்கள். இவற்றிலிருந்து கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்து அறிந்து கொள்ளலாம்.
தேவபிள்ளைகளே, இந்த உலகின் கொஞ்சகால வாழ்க்கையிலே நீங்கள் தேவனைப் பிரியப்படுத்தி வாழ்ந்தால், அவர் உங்களை இம்மையிலும், மறுமையிலும் ஆசீர்வதிப்பார். நித்திய நித்திய காலமாய் கர்த்தருடைய சமுகத்தில் ஆடிப்பாடித் துதிக்கும் பாக்கியத்தை உங்களுக்குத் தந்தருளுவார்.
நினைவிற்கு:- "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்" (எபி. 11:6).