பெலவீனமே போ போ!
"அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை" (சங். 105:37).
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்தார்கள். கடினமான வேலையினாலும், கொடிய ஆளோட்டிகளின் அதிகாரத்தினாலும் தொந்து போனார்கள். ஆனால் கர்த்தரோ, அவர்கள் மனமடிவைக் கண்டு எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து புறப்படப்பண்ணி, கானானை நோக்கி வழிநடத்திக் கொண்டு வந்தார்.
வேதம் சொல்லுகிறது, "அவர்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை". நீங்கள் பெலமுள்ளவர்களாக விளங்க வேண்டும் என்றுதான் கர்த்தர் விரும்புகிறார். நீங்கள் எந்தவிதத்திலும் பலவீனப்படுவது கர்த்தருக்கு பிரியமானதுமில்லை, சித்தமானதுமில்லை. அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்களை பலமுள்ளவர்களாக பாதுகாத்துக்கொண்டவர் பட்சபாதமுள்ளவரல்ல. இன்றைக்கு உங்களை பலமுள்ளவனாகவும், திடமுள்ளவனாகவும் பாதுகாத்துக்கொள்ள கர்த்தர் வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
‘பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருக்க வேண்டும்’ (3 யோவான் 2) என்பதே கர்த்தருடைய சித்தமும் பிரியமுமாய் இருக்கிறது. நீங்கள் கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவர் எவ்வளவு பலமுள்ளவர்! வல்லமையுள்ளவர்! நீங்களும் பெலமுள்ளவர்களாய், திடமுள்ளவர்களாய், வல்லமையுள்ளவர்களாய் விளங்க வேண்டும் என்று பரமதகப்பன் விரும்புகிறார். நீங்கள் பெலவானின் புத்திரர் அல்லவா? வேதம் சொல்கிறது, "வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்" (சங். 127:5).
தேவபிள்ளைகளே, பெலவீனங்களை எதிர்த்து நில்லுங்கள். பெலவீனம் உங்களைத் தாக்கும்போது ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’ (பிலி. 4:13) என்று திரும்பத் திரும்ப சொல்லுங்கள். அப்போது உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் பெலன் கொள்ளும்.
உலகத்தார் தங்களுடைய சரீரத்தைப் பெலப்படுத்த நூற்றுக்கணக்கான வழிமுறைகளை கையாளுகிறார்கள். ஆனால் ஆத்துமாவை பெலப்படுத்தும் வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருந்தால்தான் கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.
ஒருவேளை நீங்கள் ‘நான் பெலவீனப்பட்டு போனேனே, நோய் என்னை வாட்டுகிறதே, நான் எப்படி பெலன்கொள்ளுவது’ என்று கேட்கலாம். முதலாவது, உங்களுடைய பெலவீனங்களையும் நோய்களையும் கர்த்தர் மேல் வைத்துவிடுங்கள். அவர் அதை ஏற்கெனவே சிலுவையிலே சுமந்து தீர்த்திருக்கிறார்.
வேதம் சொல்லுகிறது, "அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்" (மத்தேயு 8:17). "அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5). தேவபிள்ளைகளே, உங்களுடைய எல்லா பிரச்சனைகளையும் கர்த்தர் மேல் வைத்துவிட்டு, பின்பு பெலப்படுத்துகிற கிறிஸ்துவை நோக்கி பார்த்து முழு இருதயத்தோடும், முழு பெலத்தோடும் துதிப்பீர்களாக. அப்போது கர்த்தர் உங்களை பெலப்படுத்துவார்.
நினைவிற்கு:- "நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும் வேண்டிக்கொள்ளுகிறேன்" (எபே. 3:16,19).