வழி தப்பின ஆடு!
"காணாமற்போன ஆட்டைப் போல வழி தப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்" (சங். 119:176).
ஒருமுறை ஒரு சகோதரனைக் குறித்து அறிமுகம் செய்யும்போது, "அவர் கூடு விட்டு கூடு பாய்கிறவர்" என்று சொன்னார்கள். நான் அந்த வார்த்தையை விக்கிரமாதித்தன் கதையில் தான் படித்திருக்கிறேன். அந்த வித்தையைக் கற்றவன் மனுஷனாயிருந்தாலும், அவன் அருகிலே ஒரு மான் செத்துக் கிடக்குமென்றால், இந்த ஆவி அந்த மானுக்குள் பிரவேசித்து மான் உயிர் பெற்று ஓடிவிடும். ஒரு பன்றி செத்துக் கிடந்தால் இந்த ஆவி அந்த பன்றிக்குள் புகுந்து பன்றியின் ரூபமெடுத்து ஓடும். அதற்கு கூடு விட்டு கூடு பாய்தல் என்று சொல்லுவார்கள்.
ஆனால் அந்த சகோதரனுக்கு அந்த பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா? அவர் பலரிடம் உதவிகளும், சிபாரிசுகளும் பெற்று உயர் பதவியில் அமருவதுண்டு. ஆனால் அவருக்கு வரும் முன்கோபத்தினிமித்தம் ஒரே வாரத்தில் அந்த வேலையை விட்டு விட வேண்டிய நிலை ஏற்படும். பிறகு இன்னொரு வேலையில் போய் சேருவார். அதிலும் ஒரு வாரம்தான். முற்கோபத்தினால் நல்ல நல்ல வேலைகளையெல்லாம் இழந்து, முடிவில் ஒருவரும் அவரை ஏற்றுக் கொள்ளாமல் மிக மோசமான நிலைமைக்கு வந்து விட்டார். அவர் குடும்பம் பசியாலும், பட்டினியாலும் தவித்தது! இது எத்தனை பரிதாபமான ஒரு காரியம்!
ஆவிக்குரிய ஜீவியத்திலும், உங்கள் உள்ளம் அலைந்து திரிகிறதாக இருந்தால், கர்த்தர் உங்களை வைத்திருக்கிற உயர்ந்த ஸ்தானத்தில் நீங்கள் நிலைத்து இருக்க முடியாதபடி, பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு தாழ்ந்த நிலைக்கு சறுக்கிவிடுவீர்கள்.
இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுலின் வாழ்க்கையைப் பாருங்கள்! கழுதைகளைத் தேடிப் போன அவனை கர்த்தர் தெரிந்து கொண்டு, அன்பு செலுத்தி, இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். ஆனால் அவன் செய்தது என்ன? கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடாமல், அமலேக்கியரின் ஆடுமாடுகளை நோக்கிச் சென்றான். அவைகளைத் தப்புவித்து தனக்கென்று ஒளித்து வைத்தான். கர்த்தர் கொடுத்த பெரிய அரண்மனை, ராஜ பதவி, அந்தஸ்து, மேன்மைகளை எண்ணாமல், ஆடுமாடுகளின் மேல் ஆசை வைத்தபடியால், தன் ஸ்தானத்தை விட்டு தள்ளுண்டு போனான்.
தேவபிள்ளைகளே, உங்களுக்கு அருமையான மீட்பரும் இரட்சகருமுண்டு. உங்களுக்கென்று அவர் ஆவிக்குரிய மேன்மைகளை, ஆவிக்குரிய உயர்ந்த ஸ்தானங்களை தந்திருக்கிறார். உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் அவர் உங்களை நிரப்பியிருக்கிறார். நீங்கள் அவரில் நிலைத்திருப்பீர்களா? ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார்: "நாமெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்" (ஏசா. 53:6).
மனுக்குலம் பரிசுத்தத்தை விட்டு பாவத்திற்குள் கூடுவிட்டு கூடு பாய்ந்தபடியினால், மனிதன் இழந்த மேன்மையையும், மகிமையையும் மீட்டுத் தரும்படி கர்த்தர் பரலோகத்தை விட்டு பூலோகத்திற்கு இறங்கி வந்தார். அந்த மேன்மையையும், மகிமையையும் மீட்டு, மறுபடியும் அவனை சேர்த்துக் கொள்ளும்படி சித்தம் கொண்டார். தேவபிள்ளைகளே, கர்த்தரின் அன்பில் நீடித்து நிலைத்திருப்பீர்களா?
நினைவிற்கு:- "சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப் பட்டிருக்கிறீர்கள்" (1 பேதுரு 2:25).