புத்தியுள்ள ஸ்திரீ!
"புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்" (நீதி. 14:1).
ஒரு பெண்ணுக்கு எல்லாமே அவளது வீடுதான். வீட்டைக் கட்டியெழுப்ப வேண்டியது அவளுடைய தலையாயக் கடமையாகும். ஆண்களின் உலகம் பெரியது. அவர்களுக்கு வேலை, சம்பாத்தியம், நண்பர்கள் என்று பலதுறைகள் இருக்கும். ஆனால் வீட்டின் பொறுப்பு பெண்ணின் கையிலேயே இருக்கிறது. அவளுடைய எண்ணமெல்லாம் கணவனையும், பிள்ளைகளையும் பற்றியதாகவேயிருக்கிறது. புத்தியுள்ள ஸ்திரீ வீட்டை எப்படி கட்டுகிறாள்?
1. கர்த்தர்மேல் பக்தி:- வீடு கட்டப்பட தேவன் மேல் அளவில்லாத பக்தி மிகவும் அவசியம். ஏனென்றால், வீட்டைக் கட்டுகிறவர் கர்த்தர்தான். வேதம் சொல்லுகிறது, "கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா" (சங்கீதம் 127:1). கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்து, அவருடைய ஆலோசனை களைப் பெற்று, கர்த்தருடைய சித்தத்தின்படியே குடும்பத்தை நடத்தும்போது, நிச்சயமாகவே அந்த குடும்பம் அன்பிலும் ஐக்கியத்திலும் கட்டியெழுப்பப்படும். கிறிஸ்து அந்த குடும்பத்தின் தலைவராயிருந்து நடத்துவார்.
கிறிஸ்துவின்மேல் அன்புள்ள ஸ்திரீகள் தங்கள் வீட்டில் குடும்ப ஜெபம் நடத்துவார்கள். பிள்ளைகளை வேத வாசிப்பிலும், ஜெபத்திலும், தேவ பக்தியிலும் வளர்ப்பார்கள். அந்தக் குடும்பம் கிறிஸ்துவையே மையமாகக் கொண்ட குடும்பமாக விளங்கும்.
2. கணவன்மேல் அன்பு:- ஒரு வீடு கட்டப்பட வேண்டுமென்றால், மனைவி கணவனிடத்தில் அன்புகொண்டு அவனுக்குக் கீழ்ப்படியவேண்டும். வேதம் சொல்லுகிறது: "மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்கு கீழ்ப்படியுங்கள்" (கொலோ. 3:18). அதாவது மனைவிகளே, தேவனையே பிரியப்படுத்தும்படியாக உங்கள் புருஷருக்கு கீழ்ப்படியுங்கள். சுயநலமற்ற சேவையையும், குறைவற்ற உண்மைகளையும் கடைப்பிடியுங்கள்.
கணவனுக்கும் மனைவிக்குமுள்ள தொடர்பு, கிறிஸ்துவுக்கும் சபைக்குமுள்ள தொடர்பாகும். வேதம் சொல்லுகிறது. "கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதைப்போல, புருஷனும் மனைவிக்கு தலையாயிருக்கிறான்" (எபே. 5:23). இந்த ஆளுகையைக் கர்த்தர்தாமே குடும்பத்தின் புருஷனுக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை மறந்து போவிடக் கூடாது. ஆதியிலே ஏவாளைப் படைத்த கர்த்தர், "உன், ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்" (ஆதி. 3:16).
3. பிள்ளைகள் மேல் உள்ள கடமை:- ஒரு பெண் தன் வீட்டைக் கட்ட வேண்டுமென்றால், அவள் தன் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் கண்ணும் கருத்துமுள்ளவளாயிருக்க வேண்டும். பிள்ளைகள் தற்செயலாய் பிறந்தவை அல்ல. வேதம் சொல்லுகிறது, "பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்" (சங். 127:3. கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட சுதந்தரத்தை கர்த்தருக்கேற்ற விதத்தில் வளர்க்க வேண்டியது, ஒவ்வொரு தாயின் கடமை அல்லவா?
புத்தியுள்ள ஸ்திரீ பூமியில் மாத்திரம் அல்ல, பரலோகத்திலும் தன் வீட்டைக் கட்டியெழுப்புகிறாள். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்காக அந்த வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணியிருக்கிறாரே!
நினைவிற்கு:- "குணசாலியான ஸ்திரீயைக் கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது" (நீதி. 31:10).