மனிதனின் புகழ்ச்சி!

" மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை" (நீதி.27:21).

உங்களை யாராவது புகழும்போது ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் புகழ்ச்சியையே நாடி ஓடிக்கொண்டிருந்தால் அது முடிவில் கண்ணியாக வந்து சேரும். இன்று வஞ்சகமான புகழ்ச்சிகளும், முகஸ்துதிகளும் எங்கும் மலிந்து கிடக்கின்றன.

அரசியல் கட்சிகள் தங்களுடைய தலைவர்களைப் புகழ்ந்து போற்றி அதன் மூலமாக கட்சியை வளர்க்கிறார்கள். கொஞ்ச நாட்களில் பார்த்தால், யாரை அவர்கள் வானளாவப் புகழ்ந்தார்களோ அவர்களை பாதாளம் வரைக்கும் தள்ளி மிதித்து, அவதூறாகப் பேசுவார்கள். இன்று புகழுகிற வாய் நாளைக்கு பழிக்கவும் கூடும் என்பதை மறந்து போக வேண்டாம்.

ஆவிக்குரிய உலகிலும் கூட, அநேகர் புகழ்ச்சியை விரும்பி தங்களை அதிகமாக விளம்பரம் செய்து கொள்ளுகிறதைக் காணலாம். தங்களுக்கு ஆவியின் வரங்களும், வல்லமையும் இருப்பது போல காண்பிப்பார்கள். தங்களை புகழ்பாட பலரை ஏற்படுத்துவார்கள். தங்களுடைய புகைப்படங்கள் எப்போதும் பத்திரிக்கையிலே வந்துகொண்டேயிருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.

இதனால் மனுஷர் மத்தியிலே ஒருவேளை பேர், புகழ் கிடைக்கக்கூடும். ஆனால் அந்த புகழ் கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது. வேதம் சொல்லுகிறது, "தற்புகழை நாடுவதும் புகழல்ல. தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்" (நீதி.25:27,28). "எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ" (லூக். 6:26).

இயேசுவை நோக்கிப்பாருங்கள். அவர் மனுஷ புகழ்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை புகழுகிற மக்களை அடக்கி, தன்னைப் பாதுகாத்துக்கொண்டார். நிக்கொதேமு இயேசுவினிடத்தில் வந்து, "ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம்" (யோவான் 3:2) என்று புகழ்ந்து சொன்னவுடனே அவர் மனம் மயங்கி நிக்கொதேமுவுக்கு கொடுக்க வேண்டிய அறிவுரையை சொல்லாமல் விட்டு விடவில்லை. ‘நிக்கொதேமு, நீ மறுபடியும் பிறக்கவேண்டும்’ என்று இயேசு வலியுறுத்தினார்.

ஒரு வாலிபன் இயேசுவினிடத்தில் ஓடி வந்து, "நல்ல போதகரே" என்று அழைத்தவுடன் அந்த புகழை அவர் ஏற்றுக்கொள்ளாமல் அவனை நோக்கி, "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே" (மாற். 10:17,18) என்று பதிலளித்தார்.

இயேசு புகழ்ச்சியிலிருக்கும் கேடுபாடுகளை தடுப்பது குறித்து தன்னுடைய சீஷர்களுக்கு அருமையாய் உபதேசித்தார். ஊழியத்திலே முன்னேறும்போது மற்றவர்கள் பாராட்டக்கூடும். பிசாசுகள் ஓடும்போது, அதைக்கண்டு உள்ளம் பெருமையடையக்கூடும். இயேசு சொன்னார், "நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்" (லூக். 17:10).

தேவபிள்ளைகளே, நீங்கள் மனுஷனுடைய புகழ்ச்சியில் மயங்கி ஆவிக்குரிய மகிமையை இழந்து விடாதேயுங்கள். தேவ சமுகத்திலே உங்களைத் தாழ்த்தி பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள். சகல கனமும், துதியும், மகிமையும் கர்த்தருக்கே உரியது.

நினைவிற்கு:- "தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" (மத். 23:12).