குணசாலியான ஸ்திரீ!

"குணசாலியான ஸ்திரீயைக் கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது" (நீதி. 31:10).

 நீங்கள் குணசாலிகளாக ஜீவிக்க வேண்டுமென்பதே கர்த்தருடைய சித்தமும், பிரியமுமாயிருக்கிறது. குணசாலியான ஸ்திரீகள் குடும்பத்திற்கும், சபைக்கும், கர்த்தருடைய நாமத்திற்கும் மிகுந்த மகிமையைக் கொண்டு வருகிறார்கள். ஒருவேளை இதுவரையிலும் நீங்கள் குணசாலிகளாக இல்லாமலிருந்தால் கர்த்தர் உங்களை குணசாலிகளாக மாற்ற விரும்புகிறார். குடும்பத்திற்காக திறப்பில் நின்று ஜெபிப்பதும், வேதவாசிப்பும், தேவபக்தியும், கர்த்தருக்கு பயப்படுவதும், உங்களை குணசாலிகளாக மாற்றும்.

வேதத்திலே, ஒரு மனைவியை அவளது கணவனே "குணசாலி" என்று பாராட்டி சாட்சி பகர்வதைப் பார்க்கலாம். "அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்" (நீதி. 31:29). அப்படியே போவாஸ் ரூத்தை புகழும்போது, "நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள்" (ரூத். 3:11) என்று மெச்சிக்கொண்டான். பாருங்கள், கணவன் மாத்திரமல்ல, அந்த ஊரார் அத்தனைபேரும் சேர்ந்து அவள் குணசாலி என்று சாட்சி கொடுக்கிறார்கள்.

 குணசாலியான ஸ்திரீ விலைமதிப்பற்றவள்! பெண்ணிற்கு மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவு பவுன் நகை, எத்தனை ஆயிரம் ரொக்கம் கொடுப்பீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். நகையும் பணமும் மேன்மைப்படுத்தப்படுகின்றன. குணமோ புறம்பே ஒதுக்கப்படுகிறது. ஆனால் ஒரு குணசாலியான ஸ்திரீயின் விலை ஏராளமான முத்துக்களைவிட விலையேறப்பெற்றது என்று வேதம் சொல்லுகிறது. முத்துக்கள் என்றாலே மிக மிக விலையேறப்பெற்றதாகும். குணசாலியான ஸ்திரீயைப் பார்க்கும்போது முத்துக்களைப் பார்ப்பதுபோல நீங்கள் அவ்வளவு கனத்தோடும், மதிப்போடும் பார்க்க வேண்டும்.

முத்து எப்படி அழகையும் மதிப்பையும் பெறுகிறது? ஒரு சிறிய தூசி அல்லது மணல் சிப்பிக்குள்ளே போய்விட்டால், முத்துச் சிப்பி ஒருவித பசையைச் சுரந்து அந்த மண்ணை மூடுகிறது. அப்படித் தொடர்ந்து அதை மூடிக்கொண்டேயிருக்கும்போது முத்து வளருகிறது. அருமையாய் பிரகாசிக்கிறது. அதுபோலவே குணசாலியான ஸ்திரீக்கு வருகிற வேதனைகள், பாடுகள், துன்பங்கள், துயரங்களெல்லாம் அவளை மேன்மைப் படுத்துகிறது. அவள் தனது இனிய சுபாவத்தால் துயரங்களை மூடி வேதனையை பொருட்படுத்தாமல் ஆவியின் கனிகளை வெளிக்காட்டுகிறாள். முடிவிலே அவள் முத்தாக மாறுகிறாள்.

ஒருவேளை உங்களுடைய துன்மார்க்கமான கணவன், கொடூரமான உறவினர்கள், வீண்பழி சுமத்தும் மாமியார், வேலை ஸ்தலத்தில் கொடூரமாய் வேலை வாங்குகிற மேலதிகாரிகள் உங்களுடைய உள்ளத்தை உருவக் குத்தக்கூடும். அப்போது சோர்ந்து போகாதேயுங்கள். நீங்கள் குணசாலியான ஸ்திரீ என்பதையும், உங்களுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். அருமையான வாசனை திரவியம் கிடைக்க வேண்டுமென்றால் ரோஜா மலர்கள் பிழியப்படத்தான் வேண்டும். அதுபோல நீங்கள் குணசாலியான ஸ்திரீயாக மாற வேண்டுமென்றால், பாடுகள் மத்தியிலும் கடந்து செல்லத்தான் வேண்டும்.

நினைவிற்கு:- "சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்" (நீதி. 31:30).