யேகோவா ரகா!

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" (சங். 23:1).

நம்முடைய தேவனுடைய பெயர் "யேகோவா" என்று அழைக்கப்படுகிறது. யேகோவா என்கிற பதத்திற்கு இருக்கிறவராகவே இருக்கிறேன் என்பது அர்த்தமாகும். கர்த்தர் யேகோவா என்ற பெயரோடுகூட இன்னும் பல பெயர்களால் அறியப்பட்டார். யேகோவாயீரே என்றால் ‘கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக் கொள்ளப்படும்’ என்று அர்த்தம். யேகோவா ஷாலோம் என்றால் ‘கர்த்தரின் சமாதானம்’ என்று அர்த்தம். யேகோவா நிசி என்றால் ‘கர்த்தர் என் ஜெயக்கொடியானவர்’ என்று அர்த்தம். அதைப்போல யேகோவா ரகா என்ற பதத்திற்கு ‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்’ என்பது அர்த்தமாகும்.

தாவீது ஒரு மேய்ப்பனாயிருந்தபோதிலும், கர்த்தரை யேகோவா ரகா என்று அழைத்து தன்னை வழிநடத்தும்படி அவரை மேய்ப்பனாய் ஏற்றுக்கொண்டார். தாவீது அன்போடு பேசிய சங்கீதம் தான் 23 - ம் சங்கீதம். இந்த சங்கீதம் சிறிய சங்கீதமாக ஆறு வசனங்களைக் கொண்டதாய் இருந்தாலும் மிகவும் இனிமையான ஒன்றாகும். வேதத்திலுள்ள ஆறுதலான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த சங்கீதம் ‘மேய்ப்பனின் சங்கீதம்’,‘விசுவாச அறிக்கையின் சங்கீதம்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. 

ஒரு நாள் சாமுவேல் தைலக்குப்பியை எடுத்துக்கொண்டு இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ண ஈசாயின் குமாரர்களை நோக்கி வந்தார். தாவீதை தவிர மற்ற எல்லா குமாரரையும் ஈசாய் வரவழைத்து பந்தி அமரும்படி செய்தார். ஆனால் கர்த்தரோ அவர்களில் ஒருவரையும் தெரிந்துகொள்ளவில்லை. "உன் குமாரர்கள் இத்தனை பேர்கள்தானா? வேறு ஒருவரும் இல்லையா?" என்று சாமுவேல் கேட்டபோது வேறு ஒரு மகன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்க்கிறான் என்று தகப்பனார் சொன்னார். 

தாவீது வரவழைக்கப்பட்டு சகோதரர்கள் மத்தியிலே ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டார். "சத்துருக்களுக்கு முன்பாக என் தலையை உயர்த்தி எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுகிறீர் என் பாத்திரம் நிரம்பி வழிகிறது" என்று தாவீது மகிழ்ச்சியோடு கூறுகிறதைப் பாருங்கள். 23- ம் சங்கீதமானது ஒருவேளை பழைய சங்கீதமாயிருந்தாலும் அதிலிருக்கிற "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையவதில்லை" என்னும் விசேஷ அறிக்கையை நீங்கள் ஒவ்வொருநாளும் செய்யும்போது அவர் உங்கள் மேய்ப்பராயிருப்பார். நீங்கள் ஒருபோதும் தாழ்ச்சியடைவதில்லை; குறைவுபட்டு போவதுமில்லை. 

ஒரு மனிதன் கர்த்தரிடத்தில் கேட்கக்கூடிய எல்லா மேன்மையான ஆசீர்வாதங்களும் இந்த சங்கீதத்தில் அடங்கியிருக்கிறது. விசேஷமாக 6-ம் வசனத்தில் இம்மைக்கும், நித்தியத்திற்குமுரிய சகல ஆசீர்வாதங்களும் அடங்கி இருக்கின்றன. "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்". இதைவிடக் கர்த்தரிடத்தில் கேட்கக்கூடிய வேறு மேன்மையான காரியம் உண்டோ? 

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை உங்கள் மேய்ப்பனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களாக? அது உண்மையானால் 23ம் சங்கீதத்திலுள்ள அத்தனை ஆசீர்வாதங்களும் உங்களை வந்து சேரும். உங்களை அவர் ஒரு நல்ல மேய்ப்பனாக வழிநடத்துவார்.

நினைவிற்கு:- "நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன்

ஜீவனைக் கொடுக்கிறான்" (யோவான் 10:11).