வீடும், கூடும்!

"...உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே" (சங். 84:3).

அடைக்கலான் குருவிக்கு ஒரு வீடு, தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்க ஒரு கூடு! கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்த சங்கீதக்காரன் ஆலயத்தின் ஒல்வொரு பகுதியாக பார்த்துவிட்டு திடீரென்று ஆலயத்திலுள்ள பீடங்களை நோக்கிப் பார்த்தார். அவருக்கு ஒரே ஆச்சரியம். அங்கே அடைக்கலான் குருவி கூடு கட்டியிருந்தது. தகைவிலான் குருவித் தன் குஞ்சுகளை வைத்திருந்தது.

இந்த சங்கீதத்தை மொழி பெயர்த்த மொழி பெயர்ப்பாளர்கள், அதனுடைய மூல பாஷையிலே, "அடைக்கலான் குருவிக்கு ஒரு கூடு இருக்கிறது. தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைப்பதற்கு ஒரு இடம் இருக்கிறது. ஆனால் என்னுடைய கூடு எங்கே இருக்கிறது?" என்று கேட்பதைப் போல அமைந்திருந்தது என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

என்னுடைய கூடு எங்கே இருக்கிறது, இந்த உலகத்தில் எனக்கு கூடு இல்லையா, நான் அந்நியனும் பரதேசியுமாய் இந்த உலகத்தில் கடந்து வருகிறேனே, எனக்கு நிலையான நகரம் இங்கு இல்லையா என்று பல சந்தர்ப்பங்களில் நாம் சிந்திக்கிறோம். இயேசு சொன்னார், "நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு, மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை" (லூக். 9:58). கர்த்தருடைய காருண்யம் அடைக்கலான் குருவிக்கு கூடு கிடைக்கச் செய்கிறது. அது இரண்டு காசுக்கு ஒரு அடைக்கலான் குருவி என்று விற்கப்படுகிற எளிய பறவைதான். மனிதனுடைய அடைக்கலத்தை தேடி ஓடி வருகிற சிறிய சிட்டு குருவிதான். ஆனால் கர்த்தரோ அதை நேசித்து தன் பீடங்களண்டையில் அதற்கு இடம் கொடுத்தார். 

வீடும், கூடும் என்கிற பதத்தை சிந்தித்துப் பாருங்கள். கூடு நிலையானதல்ல; ஆனால் வீடு நிலையானது. கூட்டிலே குஞ்சுகள் வாழுகின்றன அவை பெரிதானவுடன் கூட்டைவிட்டு பறந்து போய்விடுகின்றன. நீங்களும் இம்மைக்குரிய வாழ்க்கையை கூட்டிலே வாழுகிறீர்கள். உங்களுக்கு மனைவி, பிள்ளைகள் இருக்கிறார்கள். இது கூடுதானே ஒழிய வீடு அல்ல. வீடு என்கிற நித்தியமான வாசஸ்தலத்தை நீங்கள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அது பரலோக வீடு; அது கர்த்தருடைய வீடு; அதுதான் நித்திய வாசஸ்தலங்கள். நீங்கள் பூமிக்குரிய கூட்டிலே வாழும்போது, ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உங்களைத் தொடருகிறது. இந்தக் கூட்டைவிட்டு கடந்து போகும்போது கர்த்தருடைய வீட்டிலே நீங்கள் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பீர்கள்.

 ஒருவருக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் போது, "இன்றைக்கு நீ மரித்தால் நித்தியத்தை நீ எங்கே செலவழிப்பாய்?" என்று கேட்கிறோம். இக்கேள்வி மனிதனை சிந்திக்க வைக்கிறது. தங்களுக்கு ஒரு நித்தியவீடு வேண்டுமே என்று எண்ண வைக்கிறது. தேவபிள்ளைகளே, உங்களுக்கு ஒரு நம்பிக்கையுண்டு. ஒரு நிச்சயமுண்டு. வேதம் சொல்லுகிறது, "பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும்,தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்தியவீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்" (2 கொரி. 5:1).

நினைவிற்கு:- "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்" (யோவான் 14:2).