மவுனம்! காலை

"நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்" (சங். 39:2).

பேச ஒரு காலமுண்டு. மவுனமாயிருக்க ஒருகாலமுண்டு என்று பிரசங்கி சொல்லுகிறார் (பிர.3:7). எப்போது மவுனமாயிருக்க வேண்டுமோ அப்பொழுது நீங்கள் மவுனமாயிருந்துதான் ஆகவேண்டும். 

கத்தோலிக்க திருச்சபை மடங்களிலே சில மடங்கள் மவுன சாமியார் மடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அங்கேயுள்ள கிறிஸ்தவ துறவிகள் யாரிடமும் பேசுவதில்லை. பல மாதங்கள் அவர்கள் பேசாமலே அப்படியே இருக்கிறார்கள். இஸ்ரவேல் தேசத்திலே எலியா ஒளிந்திருந்த கேரீத் ஆற்றண்டையில் மவுன விரதம் இருக்கும் சாமியார்கள் உள்ள மடம் உள்ளது. எலியா கேரீத் நீரூற்றண்டையில் மவுனமாய் இருந்ததுபோலவே தாங்களும் மவுனமாயிருப்பதாக சொல்லி அவர்கள் விரதம் பூண்டிருக்கிறார்கள். 

பழைய ஏற்பாட்டிலே பாவத்திற்காக துக்கப்படுகிறவர்கள் அமைதியாய் தங்கள் தலைகளின் மேல் புழுதியையோ, சாம்பலையோ வாரிப்போட்டுக்கொள்ளுவார்கள். இரட்டுடுத்திக் கொள்ளுவார்கள். தங்களைச் சுத்திகரிக்கும் நாளாக அந்த நாளை பயன்படுத்துவார்கள். வேதம் சொல்லுகிறது, "சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மௌனமா இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்" (புலம்பல் 2:10).

தங்களைத் தாங்களே ஒடுக்கி மவுனமாயிருக்கும் உபவாசத்தைக் கர்த்தர் காண்கிறார். அவர்களுடைய சிறையிருப்பையெல்லாம் மாற்றுகிறார். அவர்களுடைய கண்ணீரை ஆனந்தக் களிப்பாக்கிவிடுகிறார். தாவீது தன் வாழ்நாளில் மவுனத்தின் நாளைத் தெரிந்துகொண்டு அந்த நாளில் கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து அமைதியாய் தியானிக்க ஆரம்பித்தார். அந்த மவுனம் தியானத்திற்கு ஏற்றதாயிருந்தது. அந்த மவுனம் உலகச் சத்தத்திற்கு காதுகளை அடைத்து கர்த்தருடைய சத்தத்திற்கு உள்ளத்தைத் திறக்கிற நேரமாயிருந்தது. அப்பொழுதெல்லாம் அவருடைய ஆவியிலே அவர் அனல்கொண்டார். உள்ளத்திலே அக்கினி மூண்டது (சங்கீதம் 39:3). 

இந்த உலகத்தில் பல வேளைகளில் பேசி பேசி காரியத்தைச் சாதிக்க வேண்டியதிருக்கிறது. தங்கள் பொருட்களை விற்க நினைக்கிறவர்கள் அந்தப் பொருட்களைப் பற்றி பலவாறாகப் புகழ்ந்து பேசி அவைகளை விற்கிறார்கள். இன்றைக்கு மனிதன் மாத்திரமல்ல, வானொலிப் பெட்டி பேசுகிறது, டேப் ரிக்கார்டர் பேசுகிறது, டெலிவிஷன் பேசுகிறது. 

பல வகையான விளம்பர சத்தங்கள் காதுகளில் விழுந்துக் கொண்டேயிருக்கின்றன. அந்த சத்தங்கள் மனிதனுடைய வாழ்க்கையை தங்கள் விருப்பப்படி வளைத்துக் கொள்ளுகிறது. பல சத்தங்கள் உங்களுடைய காதுகளில் இடைவிடாமல் தொனிக்கிறதினால் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க போதுமான தருணம் இல்லாமல் போய்விடுகிறது. தேவபிள்ளைகளே, கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க சில மவுன நேரங்களை உங்களுக்கென்று ஒதுக்கிக் கொள்ளுங்கள். கர்த்தருக்காக பிரதிஷ்டை செய்யப்படும் மவுனம் உங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். 

நினைவிற்கு:- "கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது" (ஆபகூக் 2:20).