கிறிஸ்துவின் ஜெப ஜீவியம்!

"...நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்" (எபி. 3:1).

இயேசுகிறிஸ்துவின் ஜெப ஜீவியம் உங்களுக்கு எத்தனை அழகான வெளிப்பாடாகவும், முன்மாதிரியாகவும் விளங்குகிறது! ஜெபஜீவியத்திலே நீங்கள் பின்பற்றி வரக்கூடிய அடிச்சுவடுகளை முன்வைத்துப் போனவர் இயேசுகிறிஸ்து.

அவருடைய வாழ்க்கையின் ஆரம்பமும், முடிவும் ஜெபமாகத்தான் இருந்தது. அவர் தம்முடைய ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக ஜெபத்தோடு ஆரம்பிக்க தீர்மானித்தார். அது சாதாரணமான ஒரு ஜெபமல்ல. மிக ஆழமான ஒன்று. தியாகமான ஒன்று. தன் உணவை மறந்து, வசதிகளை மறந்து வனாந்தரத்திற்குச் சென்று நாற்பது நாட்கள்  ஊக்கமாக ஜெபித்தார். மாத்திரமல்ல தன் வாழ்க்கைப் பயணத்தை முடிக்கும்போதும் ஜெபத்தோடு முடிக்க விரும்பி, கெத்சேமனே தோட்டத்திற்குச் சென்றார். சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்போதுகூட மூன்றுமுறை பிதாவை நோக்கிப் பார்த்து ஜெபித்தார் என்று வேதத்திலே வாசிக்கிறோம்.

கிறிஸ்துவின் ஜெப ஜீவியத்தை கவனித்துப் பாருங்கள். வேதம் சொல்லுகிறது, "அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார்" (மாற். 1:35). வனாந்தரத்திற்குச் தனித்துச் சென்று தேவ வல்லமையைப் பெறும்படி ஊக்கமாக ஜெபித்தார் (லூக். 5:16). சிறந்த ஜெபவீரரான நம் அருமை ஆண்டவர் தம்முடைய வாழ்க்கையின் அனுபவத்தோடு இணைந்து ஜெபிப்பதன் சில ரகசியங்களை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கச் சித்தமானார்.

முதலாவது, நீங்கள் ஜெபிக்கும்போது, உங்கள் அறைக்கதவை பூட்டிக்கொண்டு உள்ளத்தைக் கிழித்து அந்தரங்கத்திலிருக்கிற தேவனை நோக்கி ஊக்கமாக ஜெபிக்கவேண்டுமென்பதே அவருடைய பிரியம் (மத். 6:6). மாய்மாலமான ஜெபத்தை அவர் வெறுக்கிறார். மற்றவர்களுடைய பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணக் கூடிய வெளிவேஷமான ஜெபத்தில் அவர் பிரியப்படவில்லை. உங்களுக்கும் தேவனுக்குமிடையிலே இருக்கும் தனிப்பட்ட ஐக்கியம் ஜெபத்தின் மூலமாக வெளிப்பட வேண்டும்.

இரண்டாவது, நீங்கள் சோர்ந்துபோகாமல் எப்போதும் ஜெபம் பண்ணவேண்டுமென்று அவர் போதித்திருக்கிறார் (லூக். 18:1). ஜெபத்திலே சோர்புக்கோ, அதைரியத்திற்கோ, இடங்கொடுக்கவேகூடாது. கர்த்தர் அதை விளக்கிக் காண்பிக்கும்படி ஒரு நீதிபதியிடம் ஏழை விதவை திரும்பத்திரும்பச் சென்று தன் விண்ணப்பங்களை சமர்ப்பித்து நீதியைப் பெற்றுக்கொண்ட சம்பவத்தை உதாரணமாகக் காண்பித்திருக்கிறார்.

மூன்றாவது, நீங்கள் ஜெபிப்பதற்கு முன்பாக மனுஷரிடத்தில் ஒப்புரவாகிவிட்டு ஜெபிப்பது மிகுந்த ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். காணிக்கை செலுத்த பலிபீடத்தண்டை போகும்போது காணிக்கையை அங்கே வைத்துவிட்டு, சகோதரனோடு ஒப்புரவாகிவிட்டு, திரும்ப வந்து நீங்கள் செலுத்தினால் தான் அது தேவனால் அங்கீகரிக்கப்படும். நீங்கள் மற்றவர்களின் தப்பிதங்களை மன்னித்தால் பரமபிதா உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பார் (மத். 6:14).

இறுதியாக, விழித்திருந்து ஜெபம்பண்ண வேண்டியதின் அவசியத்தையும் ஆண்டவர் சொல்லியிருக்கிறார். வேதம் சொல்லுகிறது, "நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்" (மத். 26:41). தேவபிள்ளைகளே, நீங்கள் சோதனையில் தோல்வியடைந்து விடாதபடிக்கு விழித்திருந்து ஜெபிக்க வேண்டியது எவ்வளவு அவசியம்!

நினைவிற்கு:- "நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?" (மத். 26:40).