கிறிஸ்துவின் ஆசை!
"யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான்" (யோவான் 21:15).
உங்களுக்கு பலவகையான ஆசைகள் இருக்கிறது போல கர்த்தருக்கும் ஆசைகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஆசை நீங்கள் அவரை நேசிக்க வேண்டுமென்ற ஆசைதான். ஆம், அவர் அன்புள்ளவர் மாத்திரமல்ல, உங்களுடைய அன்புக்காக ஏங்குகிறவரும்கூட.
இயேசு உங்கள்மேல் அன்பு கொண்டதினால் பரலோக மேன்மையை உதறிவிட்டு பூமிக்கு இறங்கிவந்தார். அடிமையின் ரூபமெடுத்தார். ஆனால் அவருடைய சொந்த ஜனங்களோ அவரைப் புறக்கணித்தார்கள். "அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சோந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவா. 1:11). "அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப் பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமா யிருந்தார்" (ஏசாயா 53:3) என்று வேதம் சொல்லுகிறது.
இயேசு இந்த பூமியை விட்டு கடந்து செல்லுகிற நேரம் வந்த போது தன்னுடைய தேவைகளை, ஆசைகளை தன்னுடைய சீஷனோடுகூட மனந்திறந்து பகிர்ந்து கொண்டார். பேதுருவைப் பார்த்து, "பேதுருவே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" என்று கேட்டார். அந்த வார்த்தைகள் பேதுருவினுடைய இருதயத்தை உடைத்தன. பேதுரு கண்ணீரோடுகூட "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான்" (யோவான் 21:17). அந்த வார்த்தைகள் கிறிஸ்துவினுடைய உள்ளத்தில் ஆறுதலையும், சந்தோஷத்தையும் கொண்டு வந்தன.
இயேசு கிறிஸ்துவினிடத்தில் அநேகர் நன்மை பெறும்படியாக ஓடி வந்தார்களே தவிர, அவரை நேசிக்க ஒருவரும் ஓடி வரவில்லை. அவருடைய இருதயத்தை சந்தோஷப்படுத்த யாரும் முன்வரவில்லை. ஆகவே கிறிஸ்து பேதுருவினிடத்தில் அன்பை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் வந்தார். இன்று கர்த்தர் உங்களிடத்தில் வந்து, ‘நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா’ என்று கேட்டால் உங்களுடைய பதில் என்ன? ‘ஆம், அன்பாயிருக்கிறேன் ஆண்டவரே, நீர் அறிவீர்’ என்று சொல்லுவீர்களா?
அநேகர் தங்கள் தேவைகளைத் தெரிவிப்பதையே தங்கள் ஜெபமாகக் கொண்டுள்ளார்கள். ஆனால் முகமலர்ச்சியோடு, உள்ளத்தின் ஆழத்தில் நன்றியோடு, கிறிஸ்துவை அன்பாய் ஸ்தோத்தரிப்பதில்லை. துதிப்பதில்லை. அவருடைய ஊழியங்களின் மேல் அன்புசெலுத்தி ஊழியங்களுக்காக மன்றாடுவதில்லை. கர்த்தருடைய ஊழியக்காரர்கள் சிறியவர்களானாலும் பெரியவர்களானாலும் அவர்கள் மேல் பாசம் கொண்டு, அவர்களுக்காக பரிந்து பேசுவதில்லை. ‘நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?’ என்று கர்த்தர் கேட்கிறார்.
அநேகர் கர்த்தருக்கு விரோதமாய் முறுமுறுத்து "கர்த்தர் எனக்கு என்ன செய்துவிட்டார்? நான் கிறிஸ்தவனாய் இருந்து என்ன பிரயோஜனம்? எனக்கு என்ன நன்மை கிடைத்தது?" என்று அங்கலாக்கிறார்கள். அப்படி அங்கலாப்பதற்கு முன்பு நீங்கள் கர்த்தருக்காக என்ன செய்தீர்கள் என்றும் அவரில் அன்புகூர்ந்தீர்களா என்றும் சற்று சிந்தித்துப் பாருங்கள். "நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" என்று கிறிஸ்து கேட்கிறாரே!
நினைவிற்கு:- "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம்" (யோவான் 14:23).