கிருபையில் திருப்தி!
"நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்" (சங். 90:14).
தேவன் உங்களுக்கு அளிக்கும் கிருபையிலே திருப்தியாயிருங்கள். அப்பொழுது உங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்து களிகூருவீர்கள். அதிகாலையில் பனித்துளியானது பசும் புல்லில் மென்மையாக இறங்குவது போல் தேவ கிருபை ஒவ்வொரு நாளும் உங்கள்மேல் அருமையாய் இறங்கும். தேவ கிருபையை ருசித்த எரேமியா, "அவைகள் காலைதோறும் புதியவைகள்" (புல. 3:23) என்று மகிழ்ச்சியோடு எழுதுகிறார்.
அநேகர் தங்கள் பெலவீனங்களைக் குறித்து முறுமுறுக்கிறார்களே தவிர, தேவன் தங்களுக்கு அருளியிருக்கும் கிருபைகளைக் குறித்து திருப்தியடைந்து கர்த்தரைத் துதிப்பதேயில்லை. அப். பவுலுக்கு மாம்சத்தில் ஒரு முள் இருந்தது. அவர் அந்த முள் நீங்கும்படி மூன்று முறை கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினார்.
"அதற்கு அவர் (கர்த்தர்) என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்" (2 கொரி. 12:9) என்று அப். பவுல் சொன்னார். அவருடைய பெலவீன நேரங்களில் கர்த்தருடைய பிரசன்னமும், கிருபையும் அவரோடிருக்கிறதை உணர்ந்தபடியினால், தன் பலவீனங்களைக் குறித்து அவர் சோர்ந்துபோய் விடவில்லை.
ஒரு பக்தன் ஊழியத்திற்காக ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டபோது, எதிர்பாராத விதமாக ஒரு விபத்திற்குள்ளானார். அதில் அவர் தன் காலை இழக்க வேண்டியதாயிற்று. அதனால் அவருடைய உறவினர்களும், நண்பர்களும் அவரை மனம் சோர்ந்துப் போகப் பண்ணினது மாத்திரமல்ல, மிஷனெரி பணிக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவரோ செயற்கைக்கால் ஒன்றைப் பொருத்திக் கொண்டு மிஷனெரியாக ஆப்பிரிக்காவுக்கு சென்றார்.
அங்கே இருந்த காட்டுமிராண்டிகள் அவரைப் பிடித்து தாங்கள் வசித்த காடுகளின் அடர்ந்த பகுதிக்கு இழுத்துக் கொண்டு போனார்கள். அவர் தன் ஜீவனுக்காக அந்த மக்களிடம் மன்றாடிப் பார்த்தார். ஆனால், அவர்களோ அவருடைய மாம்சத்தைப் புசிக்கும் நோக்கத்திலேயே இருந்தார்கள். அந்தக் காட்டு மிராண்டியின் தலைவன், இன்றைக்கு அவனுடைய காலை சமைத்து சாப்பிடலாம். மறுநாள் அவனுடைய கைகளை சமைத்து சாப்பிடலாம் என்று கட்டளையிட்டான். அவர்கள் அவருடைய காலை வெட்டுவதற்காக கத்தியால் ஓங்கி ஓங்கி வெட்டியபோது, அவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
காரணம், அது மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. மரத்தினாலான காலை அவர்கள் ஒருபோதும் பார்த்திராதபடியினாலே, அவரை தெய்வீகப் பிறவி என்றும், கடவுள் அவதாரம் என்றும் எண்ணி அவருக்கு பயந்து நடுங்கினார்கள். மட்டுமல்ல, அவர் பிரசங்கித்த சுவிசேஷத்திற்கும் செவி கொடுத்தார்கள். அப்பொழுதுதான் அந்த பக்தனுக்கு கர்த்தர் ஏன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தை அனுமதித்திருந்தார் என்பதை உணர முடிந்தது. தேவபிள்ளைகளே, உங்களுடைய பெலவீனங்களின் மத்தியிலும் கர்த்தருடைய கிருபை உங்களைத் தாங்கும் என்பதை மறந்து போகாதேயுங்கள். கிருபையின் தேவன் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்.
நினைவிற்கு:- "உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப் பண்ணினீர்" (ஆதி. 19:19).