பெருக்கமும், பெலனும்!
"அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப் பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்" (சங். 105:24).
கர்த்தர் உங்களைப் பலுகப்பண்ணுகிறவர், பலவான்களாக்குகிறவர். சத்துருக்களைப் பார்க்கிலும் நீங்கள் அதிக பலவான்களாக விளங்க வேண்டும் என்பதே அவருடைய பிரியமும், சித்தமுமாயிருக்கிறது. இன்றைக்கு உலகமெங்கும் சத்துருக்கள் பெருகியிருக்கிறார்கள். எதிர்ப்பும், போராட்டமும் எல்லா இடங்களிலும் வலுத்திருக்கின்றன. ஆனால், கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் கலங்கவேண்டியதில்லை. ‘சத்துருக்களைப் பார்க்கிலும் உங்களை பலவான்களாக்குவேன்’ என்று கர்த்தர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். ஆகவே பெலன்கொண்டு திடமனதாயிருங்கள்.
தாவீது தன் மகனாகிய சாலொமோனை அழைத்து அவனுக்குக் கொடுத்த முதல் ஆலோசனை "நீ திடன்கொண்டு புருஷனாயிரு" (1 இராஜா. 2:2) என்பதேயாகும். அப்படியே சாலோமோன் இஸ்ரவேலின் மேல் ராஜ்யபாரம் பண்ணிப் பலுகினான், பெலத்தான். சத்துருக்களெல்லாரும் அவனுக்கு முன்பாக ஒடுங்கிப் போனார்கள். ஆம், தேவன் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர்.
தீர்க்கதரிசியாகிய அசரியா இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து "நீங்களோ, உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன் கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்" (2 நாளா. 15:7). அந்தப்படியே இஸ்ரவேலர் பெலன்கொண்டார்கள். சத்துருக்களை முறியடித்தார்கள். வேதம் சொல்லுகிறது: "கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்" (2 நாளா. 15:15).
யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு வழி நடத்திக் கொண்டு வந்த போது, அங்கே பலத்த ஏழு ஜாதிகள் இருந்தார்கள். முப்பத்தோரு ராஜாக்கள் அரசாண்டு கொண்டிருந்தார்கள். இஸ்ரவேலரிடமோ, போதுமான ஆயுதமோ யுத்த தளவாடங்களோ இல்லை. ஆனால் கர்த்தர் அவர்களை சத்துருக்களைப் பார்க்கிலும் பலவான்களாக்கினார்.
கர்த்தர் யோசுவாவை மிகவும் திடப்படுத்தி, "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்" (யோசுவா 1:5,6) என்று சொன்னார்.
அந்த தேவன் உங்களுடைய தேவனாயிருக்கிறார். இன்று உங்களைச் சூழ சத்துருக்கள் எழும்பியிருக்கலாம். உங்கள் அயல்வீட்டார் உங்கள்மேல் பொறாமை கொண்டு, பல வழிகளில் உங்களை மனமடிவாக்கியிருக்கலாம். உங்களுடைய சொந்தக்காரர்களே உங்களுக்கு விரோதமாய் அவதூறாகப் பேசலாம். ஆனாலும் நீங்கள் சோர்ந்து போகாதிருங்கள். இன்று கர்த்தர் தம்முடைய அன்பின் கரத்தை உங்கள்மேல் வைத்து, ‘பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன். சத்துருக்களைப் பார்க்கிலும் நான் உங்களைப் பலவானாக்குவேன்’ என்று சொல்லுகிறார்.
நினைவிற்கு:- "தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்; மனம் பதறுகிறவர்களைப் பார்த்து, நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள்" (ஏசா. 35:3,4).