அன்பின் பலிகள்!
"கர்த்தர் நம்மை பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்" (சங். 118:27).
"பலிபீடம்" என்பது, கொல்கொதா மேட்டிலுள்ள சிலுவைதான். அந்த கல்வாரி சிலுவையோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். பலிபீடத்தின் கொம்புகளில் உங்களை இணைத்து கட்டுகிற அந்த கயிறுதான் தெய்வீக அன்பு. "மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன்" (ஓசியா 11:4).
கர்த்தர் உங்களை தம்முடைய கல்வாரி அன்பினால் இழுத்துக் கட்டுவதன் காரணம் என்ன? நீங்கள் அவரோடுகூட ஐக்கியம் கொள்ள வேண்டும், அவரோடு இணைந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான். அப். யோவான், "நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும்,கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்" (1 யோவான் 1:3,6) என்று எழுதுகிறார்.
ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தியபோது, ஈசாக்கு ஏன் எதிர்ப்பும், மறுப்பும் தெரிவிக்கவில்லை? ஏனென்றால், தன்னைக் கட்டுகிறவர் தன்னுடைய சொந்த அன்புள்ள தகப்பன் என்பதை அவன் அறிந்திருந்தான் (ஆதி. 22:9). அந்த கயிறுதான் தேவ சித்தத்தின் கயிறு. தகப்பனுடைய சித்தத்திற்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுத்து அவரில் அன்பு கூருகிறதினாலே, எல்லாவற்றையும் தன் நன்மைக்கு ஏதுவாகவே செய்வார் என்று விசுவாசித்தான்.
தேவபிள்ளைகளே, பல வேளைகளில் நீங்களும் பல பாடுகள், உபத்திரவங்களின் வழியாகச் செல்லலாம். ஆனால் நீங்கள் உங்களை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கும்போது எல்லாவற்றையும் அவர் உங்களுடைய நன்மைக் கேதுவாகவே நடத்தி முடிப்பார். யோபுவுக்கு பல பாடுகள் வந்தது. என்றாலும் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டார், அவன் "நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10) என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.
மரியாள், தான் கற்பவதியாவதின் மூலமாக பல பாடுகளையும் வேதனைகளையும் அனுபவிக்க வேண்டுமென்று தெரிந்திருந்தபோதிலும், தன்னை பரிபூரணமாக தேவ சித்தத்திற்கென்று ஒப்புக் கொடுத்தாள். அவள் "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்" (லூக். 1:38).
தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் கல்வாரி சிலுவையாகிய பலிபீடத்திலே உங்களைக் கட்டியிருக்கிற கயிறுகளாகிய அன்பினால், தன்னுடைய சித்தத்தின் பாதையிலே அவர் உங்களை மகிமையாக வழி நடத்துவார் என்பதை மறந்துபோகாதேயுங்கள். இக்காலத்து பாடுகள் இனி உங்களில் வெளிப்படப்போகும் மகிமைக்கு ஒப்பானவைகள் அல்லவே!
நினைவிற்கு:- "உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்" (ஏசாயா 44:24).