கால்களுக்குத் தீபம்!

"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங். 119:105).

கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலே விளக்கை ஏற்றுகிறார். நீங்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தரைத் தொழுதுகொள்ளும்போதும், கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று கர்த்தரை ஆராதிக்கும்போதும், அந்த தீபமானது பிரகாசமாய் பற்றிப் பிடித்து சுடர்விட்டு எரிகிறது. தாவீது தன் வாழ்க்கையின் அனுபவத்தைக் குறித்து எழுதும்போது, கர்த்தருடைய வசனமே தன் கால்களுக்குத் தீபமும் தன் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது (சங். 119:105) என்று குறிப்பிடுகிறார்.

கர்த்தர் ஆவியாயிருக்கிறார். நீங்கள் அவருடைய சாயலிலே ஆவி ஆத்துமா சரீரத்தோடு சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள். வேத வசனங்களும்கூட ஆவியாயிருக்கிறது. இயேசு சொன்னார், "நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது" (யோவான் 6:63). வசனங்கள் ஆவியாயிருப்பதினால் உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அது பிரகாசமாகவேயிருக்கிறது. 

வேதம் சொல்லுகிறது, "உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்" (சங். 119:130). ஆம், தேவனுடைய வசனம் உங்களுக்குள்ளே ஒளியை உண்டாக்குகிறது. ஆவியிலே அது தீபமாய் ஏற்றப்படுகிறது. வேத வசனங்களை வாசித்து தியானிக்க தியானிக்க அந்த ஒளி ஜுவாலிக்கும்படி தூண்டப்படுகிறது.வசனத்திலுள்ள வெளிச்சத்தை அனல்மூட்டி எழுப்பிவிடுவது எப்படி, தூண்டிவிட்டு ஜுவாலிக்க செய்வது எப்படி, எந்த அளவுக்கு அதை பிரகாசிக்கச் செய்யமுடியும், என்பதைப் பற்றி சற்று உங்களுக்கு விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். 

பாருங்கள்! மின்சாரத்தில் சீரோ வால்ட் பல்பு பொருத்தப்பட்டிருந்தால் சிறு அளவுதான் பிரகாசம் உண்டாகும். 25 வால்ட் பல்பு போட்டால் இன்னும் கொஞ்சம் அதிகமான பிரகாசமாக இருக்கும். 40, 60, 100 என்று நீங்கள் அதிக வால்ட் உடைய பல்புகளை போடும்போது, பிரகாசம் அதிகரித்துக் கொண்டேயிருக்கும். 1000 வால்ட் பல்பு போட்டால் அதனுடைய பிரகாசமே தனிதான். மின்சாரம் என்பது ஒன்றுதான். ஆனால் பிரகாசங்கள் வித்தியாசமாயிருக்கின்றன. சீரோ வால்ட் பல்பை எரியச் செய்வதும் ஆயிரம் வால்ட் பல்பை எரியச் செய்வதும் ஒரே வகை மின்சாரம்தான். மின்சாரத்தில் மாற்றம் இல்லை. 

ஆனால் அந்த பல்பிலே மின்சார சக்தியை ஈர்த்து பெற்றுக்கொள்ளும் திறனிலே மாற்றம் இருக்கிறது. அந்த திறமையைப் பொறுத்து பல்பு அதிக மின்சாரத்தையோ, குறைவான மின்சாரத்தையோ இழுத்துக்கொள்ளுகிறது. அதுபோலவே கர்த்தர் ஒருவர்தான். ஆனால் நீங்கள் எந்த அளவுக்கு வசனத்தின் வல்லமையை உங்களுடைய வாழ்க்கையில் கொண்டு வருகிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் பிரகாசிப்பீர்கள். உங்களுடைய ஆவியிலே தேவன் ஒளியை ஏற்றி வைத்திருக்கிறார். அந்த ஒளி சூரிய பிரகாசம் போல மாறவேண்டுமென்று அவர் விரும்புகிறார். 

தேவபிள்ளைகளே, நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு கர்த்தருடைய வசனத்தையும், வாக்குத்தத்தங்களையும் வாசித்தும் தியானித்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக" (சங். 19:14).