கெம்பீரத்தோடே அறுப்பாய்!
"கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்" (சங். 126:5,6).
நீங்கள் கெம்பீரத்தோடே அறுங்கள். நல்ல அறுவடையை தேவன் கட்டளையிடுவார். கர்த்தருடைய தோட்டத்திலே பணிவிடைக்காரர்களாயிருப்பது உங்களுக்கு எத்தனை பெரிய பாக்கியம்! இம்மைக்குரிய அறுவடைகளுமுண்டு; நித்தியத்திற்குரிய அறுவடைகளுமுண்டு. தற்காலிகமான அறுவடைகளுமுண்டு; என்றென்றுமுள்ள அறுவடைகளுமுண்டு.
வேதம் சொல்லுகிறது: "கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்" (1 கொரி. 15:43).
கிறிஸ்துவினுடைய வருகையின் நாளிலே ஒரு பெரிய அறுவடையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அறுப்பு உலகத்தின் முடிவு. அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். வேதம் சொல்லுகிறது: "வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்" (மத். 24:31).
கிறிஸ்துவினுடைய வருகையின் போது உலகமெங்குமுள்ள கோதுமை மணிகளான பரிசுத்தவான்களை தேவதூதர்கள் ஒன்று கூட்டி, மத்திய ஆகாயத்திற்கு எடுத்துச் செல்லுவது எத்தனை மகிமையானதாயிருக்கும்! நீங்கள் அந்த நாட்களில் கெம்பீரமான அறுவடையில் காணப்பட வேண்டுமென்றால், கண்ணீரோடு விதைக்கிறவர்களாய் இருக்கவேண்டும்.
கலோனல் கிளார்க் என்ற ஒரு ஊழியர், ஒவ்வொரு நாளும் வேலைக்கு போய் திரும்பி வந்ததும், ஊரின் எல்லையிலுள்ள சமூக கூடத்தில் வைத்து கூட்டங்களை நடத்துவார். ஒவ்வொரு நாளும் குடிகாரர், திருடர், ரவுடிகள், சூதாட்டக்காரர் ஆகியோர் அக்கூட்டங்களில் கண்ணீரோடு தங்களை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுப்பதுண்டு.
அவருடைய பிரசங்கம் ஆழமானதாக இல்லாவிட்டாலும்கூட முடிவில் பரிசுத்தாவியானவரின் வல்லமையான கிரியை காணப்படும். காரணம், அழுகிற அவருடைய கண்கள்தான். அந்தரங்கத்தில் அழுவார், ஜெபத்தில் அழுவார், பிரசங்கத்தில் அழுவார், மக்களுக்கு கொடுக்கும் ஆலோசனையிலும் அழுவார்.
ஆரம்பத்தில் கண்ணீர் விடுவது அவருக்கு அவமானம் என்று தன் கண்ணீரை அடக்கி வைக்க முயற்சித்தார். ஆனால் அந்த நாட்களில் ஆவியானவரின் கிரியைகள் இல்லை. கூட்டங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன. அப்போது, "தேவனே, கண்ணீரின் ஆவியை எனக்குத் தாரும்" என்று கதறி அழுதார். கர்த்தரிடத்திலிருந்து நொறுங்குண்ட இருதயத்தையும், விண்ணப்பத்தின் ஆவியையும், கண்ணீரின் மன்றாட்டையும் பெற்றுக்கொண்டார்.
தேவபிள்ளைகளே, கண்ணீர் ஒரு அவமானச் சின்னமல்ல. அது தேவ பெலத்தின் சின்னம். கிறிஸ்துவின் முன்மாதிரியின் சின்னம். நீங்கள் கண்ணீரோடு விதைத்தால் கெம்பீரத்தோடே அறுப்பீர்கள்.
நினைவிற்கு:- "அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின" (வெளி. 21:4).