தாயின் சிறப்பு!

"என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே" (நீதி. 1:8).

ஒரு மனுஷனுக்கு கர்த்தர் கொடுக்கிற ஆசீர்வாதங்களிலே மிக அருமையான ஆசீர்வாதம் தாயும், தகப்பனும்தான். தாயினுடைய அன்பும், தியாகமும், ஜெபமும் பிள்ளைகளுக்கு என்றென்றும் ஆசீர்வாதமாய் விளங்கும். பல பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையைக் குறித்து  தியானித்துப் பாருங்கள். தாய்மார்கள் அவர்களை இளம் வயதிலேயே பக்தியிலும், ஜெபத்திலும்  வளர்த்ததுதான் அவர்களுடைய மேன்மைக்கு காரணமாய் இருக்கிறது.

ஆபிரகாம் லிங்கன், "நான் என்னுடைய தாயின் ஜெபத்தை அடிக்கடி நினைவுகூருகிறேன். அவர்கள் ஜெபம் இன்றும் என் காதில் தொனித்துக் கொண்டேயிருக்கிறது. அந்த ஜெபத்தின் ஆசீர்வாதங்கள் என் வாழ்நாள் முழுவதும் என்னை தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன" என்றார். பரிசுத்தவானும் கர்த்தருடைய ஊழியக்காரருமான தூய அகஸ்டின், எப்போதும் தன் தாய்க்காக தேவனை ஸ்தோத்தரிப்பதுண்டு. "தேவனே இன்று நான் உம்முடைய பிள்ளையாயிருக்கிறேன் என்றால் அது நீர் எனக்கு தந்த என் அருமை தாயினால்தான்" என்று ஒவ்வொரு முறையும் சொல்லி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவதுண்டு.

டி. எல். மூடி என்ற பக்தனைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தலைசிறந்த தேவனுடைய ஊழியக்காரனும் ஆத்தும ஆதாய வீரனுமாயிருந்த அவர், "இம்மட்டும் நான் சாதித்த எல்லாவற்றிற்கும் என் அம்மாவுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார். அதுபோலவே வாஷிங்டன் இர்விங் என்பவர் "என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான பகுதி என் தாய்தான்" என்றார்.

சிறந்த ஊழியக்காரரான நியூமேல் ஹால் என்பவர், "நான் பிறந்தபோது என் தாய் என்னை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை பண்ணி நான் ஒரு உத்தம ஊழியக்காரனாக வேண்டும் என்று ஜெபித்தார்கள். என்னைத் தன் மடியில் வைத்து யோவான் 3:16-ஐ என் தாய் சொல்லி தந்ததுதான் என் முதல் நினைவாகும்" என்றார்.

வேதத்தில் பல தாய்மார்களைக் குறித்து வாசிக்கலாம். ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாய் ஏவாள் (ஆதி. 3:20). ஜாதிகளுக்கெல்லாம் தாய் சாராள்(ஆதி. 17:16). இஸ்ரவேலுக்கு தாய் தெபோராள்(நியாயா. 5:7). ஆண்டவரின் தாய் மரியாள் ( லூக். 1:43). நம் எல்லோருக்கும் தாய் புதிய எருசலேம்  ( கலா. 4:26). சகல அருவருப்புகளுக்கும் தாய் மகா பாபிலோன் ( வெளி. 17:5).

இந்த பூமியிலே நீங்கள் வாழுவதற்கு உங்களைப் பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி வளர்க்கிற தாய்மாருக்கு மிகவும் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களை நேசித்து, அன்பு செலுத்தும்போது நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். பழைய ஏற்பாட்டிலே பத்து கட்டளைகளுண்டு. அவற்றுள் ஒரே ஒரு கட்டளைக்கு மாத்திரம் ஒரு வாக்குத்தத்தத்தையும் கர்த்தர் இணைத்து வைத்திருக்கிறார். அது உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக என்பதுதான்.

தேவபிள்ளைகளே, எப்போதும் உங்களுடைய தாயை சந்தோஷப்படுத்துங்கள், பிரியப்படுத்துங்கள். தாயினுடைய ஆசீர்வாதங்கள் மிக மிக மேன்மையானது. அதிலும் வயதான தாய்மாரை நீங்கள் கனம் பண்ணும்போது, அதிகமான ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுக்கொள்ள அவர் உங்களுக்கு வழி வகை செய்கிறார். கர்த்தரும் உங்களை கனம்பண்ணி ஆசீர்வதிப்பார்.

 நினைவிற்கு:- "உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே" (நீதி. 23:22).