ஜாக்கிரதையுள்ளவனும், நிர்விசாரியும்!
"ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது" (நீதி. 12:27).
ஜாக்கிரதையுள்ளவன் தன் பொருட்களின் மேல் கவனமுள்ளவனாயிருக்கிறான். கண்ணும் கருத்துமாய் தனக்குள்ளவற்றை காத்துக் கொள்ளுகிறான். "ஜாக்கிரதையுள்ளவன்" என்ற சொல்லுக்கு எதிரான ஒரு சொல் "நிர்விசாரமுள்ளவன்" என்பதாகும். ஆமோஸ் தீர்க்கதரிசி, "சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களுக்கு ஐயோ!" (ஆமோஸ் 6:1) என்று சொல்லுகிறார்.
இரட்சிக்கப்பட்டும், கர்த்தருடைய ஈவுகளை அறிந்தும் நீங்கள் நிர்விசாரமாயிருப்பீர்களென்றால், உங்களைப்போல பரிதபிக்கத்தக்கவர்கள் வேறு யாருமில்லை. கிறிஸ்துவினுடைய வருகை சமீபமாகி விட்டது. கர்த்தர் எழுப்புதலை ஊற்றித் தமது ஜனத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். தாகமுள்ள ஒவ்வொருவரையும் அபிஷேகித்துக் கொண்டிருக்கிறார். பரிசுத்தத்திலே பூரணப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சாலையில் பஸ் வேகமாக வருகிறது. ஒருவன் நிர்விசாரமாய் நின்று கொண்டிருந்தால் அவன் நிலைமை என்னவாகும்? பஸ் அவனை மோதி வீழ்த்திவிடும் அல்லவா? பரீட்சை நெருங்குகிறதை அறிந்தும் மாணவன் படிக்காமல் நிர்விசாரமாயிருந்தால், அவன் தேர்விலே தோல்வியடைவான் அல்லவா? தன் வீட்டில் பணம், விலையுயர்ந்த பொருட்கள் இருந்தும் கதவைப் பூட்டாமலிருந்தால் திருடன் கொண்டு போவிடுவான் அல்லவா?
சோதோமிலுள்ள மக்களின் பரிதாபமான நிலைக்கு காரணம் என்னவென்றால், அவர்களுடைய நிர்விசாரம்தான். தங்களுக்கு வரப்போகிற அழிவைக் குறித்து அவர்கள் அறிந்து கொள்ளாமல் புசித்து குடித்து மனம் போல ஜீவித்துக் கொண்டிருந்தார்கள். முடிவில் தேவ கோபாக்கினை இறங்கினது. கர்த்தர் வானத்திலிருந்து அக்கினியையும், கந்தகத்தையும் இறங்கப் பண்ணி அவர்களை அழித்துப் போட்டார்.
எசேக்கியேல் தீர்க்கதரிசி "இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியாகிய சோதோமின் அக்கிரமம்" (எசே. 16:49) என்று சொல்லுகிறார். ஆம், சோதோமின் அழிவுக்குக் காரணம் நிர்விசாரம்தான்.
ஒரு முறை ஒருவன் விமான நிலையத்திலே ஒரு பெட்டி இருப்பதாகவும், அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் பலமுறை அதிகாரிகளை எச்சரித்துப் பார்த்தான். தொலைபேசி மூலமாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் குண்டு வெடிக்கப்போகிறது என்று எச்சரித்தான். ஆனால், அவர்களோ அதைப் பொருட்படுத்தாமல், நிர்விசாரமாய் இருந்தார்கள்.
முடிவாக சுங்க அதிகாரிகள் வந்து பெட்டியை அப்புறப்படுத்த முயற்சித்தபோது திடீரென்று அந்தக் குண்டு வெடித்தது. ஒன்றும் அறியாத சிலர் அதில் மரிக்கவேண்டியதாயிற்று. கொஞ்சம் நிர்விசாரம் எத்தனை பயங்கரமான ஆபத்துக்குள் வழி வகுத்து விடுகிறது பாருங்கள். வேதம் சொல்லுகிறது: "மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்" (நீதி. 1:32).
தேவபிள்ளைகளே, உலகத்தின் கடைசி நிமிட நேரத்திற்கு வந்து விட்டீர்கள். ஒன்று நீங்கள் பாதாளத்திலுள்ள அக்கினிக் கடலில் பங்கடைய வேண்டும் அல்லது பரலோக ராஜ்யத்தில் பரிசுத்தவான்களோடு கூட பங்கடைய வேண்டும். நீங்கள் நிர்விசாரமாயிருக்கிறீர்களா? அல்லது ஜாக்கிரதையுள்ளவர்களாயிருக்கிறீர்களா?
நினைவிற்கு:- "உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டும்" (எபி. 6:12).