ஐக்கியத்தின் இரகசியம்!

"மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்" (நீதி. 15:1).

கணவன் மனைவி உறவுக்கும், குடும்ப ஐக்கியத்திற்கும் ஒருவரோடொருவர் அன்போடு மனம் திறந்து பேசுவது மிகவும் அவசியம். வேதம் சொல்லும் ‘மெதுவான பிரதியுத்தரம்’ என்பது குடும்பத்திலுள்ள பல சிக்கல்களை நீங்கள் அவிழ்ப்பதற்கு ஏதுவாயிருக்கும்.

அநேக குடும்ப உறவுகள் முறிந்து போவதற்கு, மனம் திறந்து பேசாதது ஒரு முக்கிய காரணமாகும். அநேகக் கணவன் மனைவியர் ஒருவருக்கொருவர் அந்நியரைப் போல நடந்துகொண்டு, பல கசப்புகளை மனதிற்குள் அடக்கி வைத்து, ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வாழுகிறார்கள். குடும்பத்தில் முறிவுகள் ஏற்படுத்துவதற்கு இதுவே முக்கிய காரணம்.

தேவபிள்ளைகளே, உங்கள்  குடும்பத்தில் நீங்கள் எல்லோருடனும் மனந்திறந்து பேசுகிறீர்களா? விசேஷமாக வாழ்க்கைத் துணையோடுகூட மனம் விட்டு பேசுவதற்கு நேரம் ஒதுக்குகிறீர்களா? அப்படி பேசும்போதுதான் உங்களுடைய வார்த்தைகள் குடும்பத்தில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நிலவச்சேயும்.

உங்கள் உள்ளம் கோபங்கொண்டிருந்தாலோ அல்லது எரிச்சலடைந்திருந்தாலோ பேசாமல் அமைதியாயிருந்து விடுங்கள். மனதை அடக்க பழகிக் கொள்ள வேண்டும். வேதம் சொல்லுகிறது, "பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்" (நீதி. 16:32). சாந்தகுணம் ஆவியின் கனிகளில் ஒன்று என்பதை மறந்து போகாதிருங்கள் (கலா. 5:23).

குடும்ப உறவு மேன்மையாய் விளங்க வேண்டுமென்றால் காதுகளால் கேட்கிறதை வைத்துக்கொண்டு முடிவு எடுக்காமல் நிதானத்துடன் உண்மையை அறிந்து கொள்ள நீங்கள் பிரயாசப்படவேண்டும். வேதம் சொல்லுகிறது, "ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்" (நீதி. 15:7). அறிவை உணர்த்தும் வரத்தையும், ஞானத்தை அறிவிக்கும் வரத்தையும் கர்த்தர் உங்களுக்கு வாக்குப்பண்ணியிருக்கிறாரே (1 கொரி. 12:8). தனிப்பட்ட நபரைப் பற்றியோ, சூழ்நிலைகளைப் பற்றியோ உங்களுக்கு இருக்கும் தெளிவான அறிவானது புரிந்து கொள்ளுவதற்கும், ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும் மிகவும் பிரயோஜனமானதாயிருக்கும்.

ஒரு முறை ஒரு தேவ ஊழியர் இந்துக்களோடும், முஸ்லீம்களோடும் இணைந்து கூட்டுப்பிரார்த்தனை நடத்தினார் என்றும், பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார் என்றும் வேறொரு பத்திரிக்கை மிக கேவலமாக அவதூறாக எழுதி, அவருடைய பெயரைக் கெடுத்தது. ஆனால் முழுமையான விசாரணையின்போது அந்த குற்றச்சாட்டுகளெல்லாம் பொய் என்பது தெரிய வந்தது. மற்றவர்களைக் குற்றப்படுத்துவதற்கு முன்னர், நேரில் சென்று உண்மை நிலையை அறிந்தால் கசப்பான உணர்வுகளுக்கும், விரோதங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டிய அவசியமிராது.

தேவபிள்ளைகளே, உங்களுடைய வாயின் மொழியால் மகிழ்ச்சியுண்டாகட்டும். உங்களுடைய பேச்சினால் சிநேகிதரை சம்பாதியுங்கள். பூமியின் வழியாய் கடந்து போகிற  அற்ப சொற்ப நாட்களிலே நீங்கள் மற்றவர்களோடு ஐக்கியம் கொண்டவர்களாக காணப்படவேண்டும்.

நினைவிற்கு:- "ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்" (நீதி. 16:7).