ஔஷதம்!

"மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப் பண்ணும்" (நீதி. 17:22).

"ஔஷதம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? ஔஷதம் என்பது அருமருந்து. அது தலை சிறந்த தெய்வீக ஆரோக்கியத்தைத் தரும் பானம். இது எல்லா நோய்களையும் நீக்கி ஆரோக்கியத்தைக் கொண்டு வரும்.

மருந்துக்கடைகளில் பலவிதமான ஔஷதங்களைக் காணலாம். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கென்று கர்த்தர் கொடுத்திருக்கிற ஒரு விசேஷ ஔஷதம் மனமகிழ்ச்சியாகும் (நீதி. 17:22). மனமகிழ்ச்சியாயிருக்கிறவன் முகமலர்ச்சியாயிருக்கிறான். அவனுடைய முகம் களையுள்ளதாக் காணப்படும். சிரித்த முகத்தோடு இருக்கிறவர்களை எல்லோரும் விரும்புவார்கள்.

உங்களுக்கு எப்போது மனமகிழ்ச்சி உண்டாகும்? கிறிஸ்து உங்கள் உள்ளத்தில் வரும்போது, அவருடைய மகிமை உங்களைப் பிரகாசிக்கச் செய்யும்போது மனமகிழ்ச்சி வரும். இதனால் நீங்கள் உங்கள் பாவங்களைக் குறித்து எண்ணிக் கவலைப்படுவதில்லை. அதை கர்த்தர் மேல் வைத்துவிட்டு அவரைப் போற்றிப் புகழுகிறீர்கள். வேதம் சொல்லுகிறது: "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்" (சங். 37:4).

தேவபிள்ளைகளே, குடும்பத்திலே மனைவி பிள்ளைகளோடு சந்தோஷமாயிருக்கிற நேரத்தை உருவாக்குங்கள். அது ஒரு நல்ல ஔஷதம். குடும்பத்தில் மன மகிழ்ச்சியாயிருந்தால் வெளியிலுள்ள பிரச்சனைகளை முழுபெலத்தோடு எதிர்த்து நிற்க அது உதவும். சத்துரு உங்களை மேற்கொள்ள முடியாது.

அடுத்து நல்ல வார்த்தைகளை ஔஷதம் என்று வேதம் குறிப்பிடுகிறது. "பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்" (நீதி. 12:18). நல்ல வார்த்தைகளை நீங்கள் பேசுவது மற்றவர்களுக்கு ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் தருகிறது. ஒரே நாவுதான் மற்றவர்களைச் சோர்ந்து போகப் பண்ணுகிற வார்த்தைகளையும், உற்சாகப்படுத்துகிற வார்த்தைகளையும் பேசுகிறது. உற்சாகப்படுத்திப் பேசும்போது, அது வல்லமையான ஔஷதமாய் விளங்குகிறது.

வில்லியம் கோல்கேட் என்ற சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் வறுமையிலும், பசியிலும் வாடி பிழைப்புத் தேடி பட்டணத்திற்கு வந்தான். அங்கே கர்த்தருடைய ஊழியக்காரர் ஒருவர் அவனைச் சந்தித்தார். அவனை உற்சாகப்படுத்தி ‘மகனே ஒரு நாள் வரும், அப்போது நீ மிகவும் உயர்த்தப்படுவாய்.  நீ என்ன தொழிலைச் செய்தாலும் ஜனங்களுக்கு சிறந்ததைக் கொடு. அப்பொழுது கர்த்தர் உனக்குச் சிறந்ததைத் தருவார்’ என்றார். அந்த வார்த்தைகள் அந்த சிறுவனை மிகவும் உற்சாகப்படுத்தியது. அந்த வார்த்தைகள் அவனுக்கு பெரிய ஔஷதமாய் அமைந்தன. பிற்காலத்தில் அந்த சிறுவன் கோல்கேட் என்னும் பெரிய நிறுவனத்தின் உரிமையாளராய் மாறினான்.

வேதம்  சொல்லுகிறது: "மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!" (நீதி. 15:23). ஔஷதமான வார்த்தைகளைப் பேசப் போகிறீர்களா, அல்லது விஷம் நிறைந்த வார்த்தைகளைப் பேசப் போகிறீர்களா, என்பதை நீங்கள் பேசுவதற்கு முன்பாகச் சற்றுச் சிந்தியுங்கள். தேவபிள்ளைகளே, உங்களுடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் நல்ல ஔஷதமாக இருக்கட்டும்.

நினைவிற்கு :- "இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு, மதுரமும், எலும்புகளுக்கு ஔஷதமுமாகும்" (நீதி. 16:24).