நற்செய்தி!

"கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்" (நீதி. 15:30).

இந்த நாட்களில் நற்செய்திகளைவிட துர்ச்செய்திகளைத்தான் அதிகமாக கேட்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் காலை செய்தித் தாளை திறந்து பாருங்கள். அங்கே விமானம் நொறுங்கி விழுந்து இருநூறு பேர் மரணம், கண்ணி வெடியினால் நூறுபேர் மரணம், பூமி அதிர்ச்சியினால் ஆயிரம் பேர் மரணம் என்று மரணம், கொலை, கற்பழிப்பு போன்றவை பற்றிய செய்திகளே அதிகமாய் நிரம்பியிருக்கின்றன.

இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் நற்செய்தியின் தேவனாயிருக்கிறார். அவர் மேல் விசுவாசம் வைக்கும்போது உங்கள் துக்கங்கள் சந்தோஷமாய் மாறும். உங்கள் கண்ணீர் ஆனந்தக்களிப்பாகும்.  அவர் குற்ற மனச்சாட்சியை நீக்கி சமாதானத்தைத் தருகிறார். பாவத்தை நீக்கி இரட்சிப்பின் சந்தோஷத்தைத் தருகிறார். சாபங்களை நீக்கி விடுதலையைத் தருகிறார். நோய்களை நீக்கி ஆரோக்கியத்தைத் தருகிறார். இவைகளெல்லாம் எத்தனை அருமையான நற்செய்திகள்!

ஆதாம், ஏவாள் பாவம் செய்ததினால் முதல் முறை துர்ச்செய்தி உலகத்திற்குள் வந்தது. நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட வேண்டிய துர்ச்செய்தி, வேதனையோடு குழந்தை பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலை, வியாதியும் மரணமும் ஆட்கொள்ளக்கூடிய சாபங்கள் ஆகியவையும் உலகத்தினுள் வந்தன. இவைகளின் மத்தியிலும் கர்த்தர் ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தார். அதுதான் சர்வ சிருஷ்டியையும் நேசிக்கும் மேசியா வருவார் என்கிற நற்செய்தி.

"உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்" (கலா. 3:8) என்று கர்த்தர் ஆபிரகாமுக்கு சுவிசேஷமாய் முன்னறிவித்தார். " நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" (ஆதி. 12:2) என்ற நற்செய்தியை ஆபிரகாமுக்குக் கொடுத்தார்.  அதைப்போலவே கர்த்தர் மோசேக்கு, "அடிமைத்தனத்திலிருந்து உங்களை மீட்டெடுப்பேன். பாலும் தேனும் ஓடுகிற கானானை தந்தருளுவேன், பார்வோனுக்கு முன்பாக அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்வேன்" என்ற நற்செய்தியைக் கொடுத்தார். நம் தேவன் நற்செய்தியின் தேவன்.

இயேசுகிறிஸ்து பூமிக்கு வரும்போது அந்த நற்செய்தி தேவ தூதர்களால் உலகத்திற்கு அறிவிக்கப்பட்டது. "இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" (லூக். 2:10) என்று தேவதூதன் கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய நற்செய்தியை அறிவித்தான்.

புதிய ஏற்பாடு சுவிசேஷத்தோடு ஆரம்பிக்கிறது. சுவிசேஷம் என்றால் நற்செய்தி என்பது அர்த்தம். இயேசு தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தை பிரசங்கித்தார் (மாற்கு 1:15).  கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றிய செய்தி எத்தனை அருமையான நற்செய்தியாயிருக்கிறது! உங்களை நேசிக்கிற கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொள்ள சீக்கிரமாய் வருகிறார். அவர் வரும்போது நீங்களெல்லாரும் அவருடைய சாயலில் மறுரூபமாக்கப்படுவீர்கள். அவரோடுகூட ஆயிரம் வருஷம் பூமியிலே அரசாளுவீர்கள். இது எத்தனை அருமையான நற்செய்தி! தேவபிள்ளைகளே,  அடுக்கடுக்கான ஆசீர்வாதங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

நினைவிற்கு:- "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்" (யோவான் 14:3).