சோம்பல் வேண்டாம்!

" சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்" (நீதி. 21:25).

சரீர சோம்பலானாலும் சரி, ஆவிக்குரிய சோம்பலானாலும் சரி அதை வேதம் எதிர்க்கிறது. நீதிமொழிகளின் புத்தகத்தை வாசித்தால் அங்கே சோம்பலைக் குறித்து பல எச்சரிப்பின் வசனங்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். சரீர சோம்பல் கடனைக் கொண்டு வரும்; ஆவிக்குரிய சோம்பலோ நரகத்தில் தள்ளி விடக்கூடும்.

வேதம் சொல்லுகிறது, "பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்" (மத். 25:30). "ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்" (எபே. 5:14).

ஒரு முறை மார்டின் லூதர், தன் பிரசங்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டார், "கிறிஸ்தவர்களை அழிப்பது எப்படி" என்று கலந்து ஆலோசிக்க பிசாசுகளின் கூட்டத்தை சாத்தானானவன் நடத்தினான். ஒரு பிசாசு "கிறிஸ்தவர்கள்மேல் காட்டு விலங்குகளை ஏவி அவர்களை கொல்லுவேன்" என்றது. மற்றொரு பிசாசு "கிறிஸ்தவர்கள் செல்லும் கப்பலின்மீது பலத்த காற்று அடிக்குமாறு செய்து அவர்களைக் கொல்லலாம்" என்றது. இப்படியாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆலோசனையைக் கூறினது. கடைசியாக ஒரு பிசாசு, "மனிதனை சோம்பலுள்ளவனாக மாற்றி, ஆத்தும இரட்சிப்பைக் குறித்து கவலையற்று நிர்விசாரமாக்கி, இன்னும் காலம் இருக்கிறது பிறகு மனந்திரும்பிக் கொள்ளலாம்" என்று சொல்லுவேன் என்றது. அப்பொழுது சாத்தான் அந்த பிசாசை மிகவும் பாராட்டி அகமகிழ்ந்தான்.

சோம்பலின் காரணமாக எண்ணிறந்த ஆத்துமாக்கள் பாதாளத்தை நோக்கி செல்லுகின்றன. வேதம் சொல்லுகிறது, "....இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்?" (எபி. 2:4). சோம்பலுள்ளவன், "எல்லாவற்றையும் நாளை பார்த்துக்கொள்ளலாம் பிறகு செய்யலாம்" என்று சொல்லுவான். ஆனால் உற்சாகமுள்ளவனோ நாளை நம்முடைய நாள் அல்ல என்று, அன்றன்றைக்குரியதை அன்றன்றே செய்து முடிப்பான். நீங்கள் அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். ஆவியில் அனலுள்ளவர்களாயிருக்க வேண்டும் (ரோமர் 12:11). அப்பொழுதுதான் ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய முடியும். சாத்தானுடைய வல்லமைகளை எதிர்த்து நிற்க முடியும்.

இயேசுகிறிஸ்து தாலந்துகளைப் பற்றிய ஒரு உவமையை சொன்னார். ஐந்து தாலந்துகளைப் பெற்றவன், வேறு ஐந்து தாலந்துகளைச் சம்பாதித்தான். இரண்டு தாலந்துகளை வாங்கினவன் வேறு இரண்டு தாலந்துகளைச் சம்பாதித்தான். ஆனால் ஒரு தாலந்தை வாங்கினவனோ, அந்த தாலந்தை விருத்தியடையச் செய்யாமல் நிலத்திலே புதைத்துப் போட்டான். எஜமான் வந்தபோது அவன்மேல் கோபங்கொண்டார். ‘பொல்லாதவனும் சோம்பலுமாகிய ஊழியக்காரனே’ என்று சொல்லி அவனுடைய கைகளிலிருந்த தாலந்தை எடுத்து பத்து தாலந்துள்ளவனுக்குக் கொடுத்தான். தேவபிள்ளைகளே, சோம்பலை அப்புறப்படுத்தி, சுறுசுறுப்புள்ளவர்களாயிருங்கள்.

நினைவிற்கு:- "ஆதலால், ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால் அது அவனுக்குப் பாவமாயிருக்கும்" (யாக். 4:17).