தன் கூட்டை விட்டு!
" தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தை விட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்" (நீதி. 27:8).
சாலொமோன் ஞானி கூட்டைவிட்டு அலைகிற குருவி ஒன்றை பார்க்கிறார். கூட்டிலிருந்தபோது அதற்கு எவ்வளவோ ஆறுதல், வசதி, இளைப்பாறுதல் உண்டு. ஆனால் கூடு இல்லாமல் அலையும் போது மழையும், காற்றும் அதற்கு இன்னல் ஏற்படுத்த, அது அங்கலாக்கிறது. பின்பு ஞானி, தன் ஸ்தானத்தை விட்டு அலைகிற மனிதனையும் பார்க்கிறார். தன் நிலையிலிருந்து விழுகிற அந்த மனுஷனின் பரிதாப நிலையைப் பற்றி சிந்தித்து அங்கலாக்கிறார்.
ஒருவர் ரயில்வேயில் பெரிய அதிகாரியாக இருந்தார். அவருக்கு பெரிய வீடு, வசதியான வாழ்க்கை, எல்லாம் இருந்தன. ஆனால் அவருடைய வாலிப மகன் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே ஓடிப்போய் விடுவான். சில மாதங்கள் கழித்து அவனைப் பார்த்தால் பரிதாபமாக இரயில்வே பிளாட்பாரத்தில் தூங்கி, தலையில் சுமை சுமந்து அதில் கிடைக்கக்கூடிய கொஞ்ச காசுகளை வைத்து பசியும் பட்டினியுமாய் தன்னுடைய நாட்களை கடத்திக் கொண்டிருப்பான். பெற்றோர் போய் அவனை அழைத்துக் கொண்டு வருவார்கள்.
அதுபோல, கர்த்தர் ஒரு மனிதனை ஒரு ஸ்தானத்தில் வைக்கிறார். அவனுக்கு இரட்சிப்பின் சந்தோஷத்தையும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தையும், தேவனோடு உறவாடும் மேன்மையையும் தந்து ஆசீர்வதிக்கிறார். அவனுக்கு உதவியாக இருக்கும்படி பரலோகத்தின் தேவ தூதர்களைக் கட்டளையிடுகிறார். நித்திய வாசஸ்தலங்களை ஆயத்தப்படுத்தி அவனை மேன்மைப்படுத்துகிறார். ஆனால் அவனோ, ராஜாவாக அபிஷேகம் பண்ணின கர்த்தரை விட்டுவிட்டு, பாவ வழிகளுக்கு சென்று கோபாக்கினையின் மகனாக, சாத்தானின் மகனாக பாதாளத்தையும், அக்கினிக் கடலையும் நோக்கி செல்லுகிறான்.
ஆதியிலே, தூதர்களில் அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியை கர்த்தர் மேன்மைப்படுத்தி வைத்திருந்தார். அவன் பிரதான கேரூபாக எண்ணப்பட்டான். ஆனால் கர்த்தர் வைத்திருந்த மேன்மையான ஸ்தானத்தில் அவன் நிலைத்திராமல் "நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன்" (எசாயா 14:13) என்று கூறி, கர்த்தருக்கு சமமாக தன்னை எண்ணினான். இதனால் அவன் தன்னுடைய ஸ்தானத்தை இழந்து இளைப்பாறுதலற்றவனானான். இன்றைக்கு, சாத்தானாக அந்தகாரத்தின் லோகாதிபதியாக அலைந்து திரிகிறான்.
கர்த்தர் உங்களை மேன்மையா வைத்திருக்கிறார். அவர் உங்களை வைத்திருக்கிற ஸ்தானத்திலே நீங்கள் நிலைத்திருங்கள். பாவ கவர்ச்சிகளுக்கும், உலகத்தின் இன்பங்களுக்கும் மயங்கி விடாதபடி ஜாக்கிரதையாயிருங்கள். நீங்கள் உன்னதமான கர்த்தருடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள். அவரை ‘அப்பா, பிதாவே’ என்று அழைக்கக்கூடிய புத்திர சுவிகார ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள்.
மட்டுமல்ல, கர்த்தர் உங்களை ராஜாவாகவும், ஆசாரியராகவும் அபிஷேகம் பண்ணியிருக்கிறார். நித்தியத்தில் மேலான சுதந்திரங்களை உங்களுக்கு வைத்திருக்கிறார். அதைக் காத்துக் கொள்ளுங்கள். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய அன்பை, அவருடைய கிருபையை விட்டு விலகி, கூட்டை விட்டு அலையும் குருவியாயிராதேயுங்கள்.
நினைவிற்கு:- "நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு" (சங். 16:6).