வேதமே வெளிச்சம்!

"கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி" (நீதி. 6:23).

"வேதமே வெளிச்சம்" என்று ஞானி திட்டமும் தெளிவுமாய் கூறுகிறார். "உம்முடைய வசனமே என் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமாய் இருக்கிறது" என்று தாவீது அழகாக அறிவுறுத்துகிறார். பாதை தெரியாத ஆட்டைப் போல நீங்கள் அலைந்து திரியும்போது, வேதம் உங்களுக்கு வெளிச்சம் தந்து கர்த்தருடைய பாதையிலே உங்களை வழி நடத்துகிறது.

கடும் புயலில் சிக்கிக் கொண்ட கப்பல் ஒன்றைப் பாருங்கள். எங்கும் இருள் சூழ்ந்த நேரம் அது. கடலின் அலைகள் கொந்தளித்து பொங்கி கப்பல் மேல் மோதிக் கொண்டிருக்கின்றன. அமிழ்ந்து விடுமோ என்று மாலுமிகள் பயப்படுகிறார்கள். புயல் சீறி கப்பல் அலைக்கழிக்கப்படுகிறது. எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் மாலுமிகள் தடுமாறுகிறார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு திசையிலிருந்து வரும் கலங்கரை வெளிச்சத்தின் ஒளியை அந்த மாலுமிகள் பார்ப்பார்களென்றால், அவர்களுடைய உள்ளத்தில் எத்தனை சந்தோஷத்தையும், ஆறுதலையும் அது கொண்டு வரும்! ‘மிக அருகிலேதான் கரையும் இருக்கிறது. நேராக அங்கே கப்பலை செலுத்தினால்  புயலுக்கும், கொந்தளிப்புக்கும் தப்பி விடலாம்’ என்று சொல்லி கலங்கரை வெளிச்சத்தை நோக்கி செல்லுவார்கள் அல்லவா?

பல வேளைகளில், உங்களுடைய வாழ்க்கையிலேயும் புயல் வீசுகிறது. கடல் கொந்தளிக்கிறது. எந்த திசையில் செல்லுவது என்று தெரியாமல் நீங்கள் தடுமாறுகிறீர்கள். முக்கியமான தீர்மானங்களை அந்த நேரத்தில் நீங்கள் உறுதியாய் எடுக்க வேண்டியதிருக்கிறது. கர்த்தருடைய வழி எது? கர்த்தருடைய சித்தம் எது? எந்த பாதையில் சென்றால் தேவனுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் என்றெல்லாம் உங்கள் உள்ளம் ஏங்குகிறது. அந்த நேரத்தில் கர்த்தருடைய வசனமே உங்களுக்கு வெளிச்சம் தருகிறது.

 தேவபிள்ளைகளே, வேதத்தை திறந்து வாசிக்கும்போது ‘ஆண்டவரே, எந்த வழியில் செல்ல வேண்டும் என்று சொல்லித் தாரும்’ என்று கேளுங்கள். கர்த்தர் நிச்சயமாகவே தம்முடைய வசனத்தை உங்களுக்குக் கொடுத்து உங்களை அருமையாய் வழி நடத்துவார். "கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது" (சங். 19:8).

இங்கிலாந்து தேசத்தில் ராஜாவாக ஒருவர் பட்டம் ஏற்கும்போது, அரசருக்குரிய செங்கோலை அவரது கரங்களிலே கொடுத்து, பரிசுத்த வேதாகமத்தையும் அவருக்கு பரிசளிப்பார்கள். "எங்கள் மகிமை பொருந்தின அரசரே, உலகத்திலே மிகவும் விலையேறப்பெற்றதான இந்த வேதாகமத்தை இப்பொழுது நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். இதில் ஞானமுண்டு, கர்த்தருடைய வெளிச்சமுண்டு, ராஜரீக சட்டமுண்டு, இது தான் தேவனுடைய வார்த்தைகளை உள்ளடக்கியது" என்று சொல்லுவார்கள். வேதாகமத்தைப் பெற்றுக் கொண்ட பிறகுதான் அவர் தேசத்தை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுவார்.

தேவபிள்ளைகளே, வேதம் பெரிய பெரிய ராஜாக்களுக்கும், ஏழை மக்களுக்கும் வெளிச்சம் கொடுக்கிறது. படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வெளிச்சம் கொடுக்கிறது. செல்வந்தர்களுக்கும், தரித்திரருக்கும் வெளிச்சம் தருகிறது. அதற்கு எந்த வித்தியாசமுமில்லை.

நினைவிற்கு:- "உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்" (சங். 119:130).