மான் கால்கள்!

"அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்" ( சங். 18:33).

மான்களின் கால்கள் வேகமாய் ஓடும் வல்லமைபெற்றவை. அதே நேரத்தில் மான் கால்கள் துள்ளிக் குதித்து மலைகளின் மேல் ஏறக்கூடியதாகவும் இருக்கின்றன. யாரும் ஏறி வரக்கூடாத உயர்ந்த குன்றுகளின் மேல் மான்கள் அழகாய் துள்ளிக் குதித்து ஏறி கெம்பீரமாக நிற்கும். 

வேதத்தில் மூன்று இடங்களில் ‘கர்த்தர் என் கால்களை மான் கால்களைப் போலாக்குவார்’ என்கிற வசனத்தை வாசிக்கலாம் (2 சாமு. 22:34, சங். 18:33, ஆபகூக் 3:19). இந்த மூன்று வசனங்களிலும் மான் கால்கள் உயர்தலங்களில் நிற்க வைப்பதை நீங்கள் காணலாம். கன்மலையாகிய கிறிஸ்துவில் நீங்கள் நிலை நிற்பதற்கு மான் கால்கள் உங்களுக்குத் தேவை. 

மான் கால்களாயிருக்க வேண்டிய சிலருடைய கால்கள் இன்றைக்கு யானைக் கால்களாயிருக்கின்றன. ஏன் இப்படி ஆனது? யானைக்கால் என்பது ஒரு நோய். இந்த நோய் கொசுக்கடியின் மூலம் ஒரு சரீரத்திலிருந்து இன்னொரு சரீரத்திற்கு செல்லுகிற கிருமிகளால் உண்டாகிறதாகும். கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய கிருமிகள் கொசுக் கடியின் மூலமாய் பரவுகிறது. 

இந்த நோய் உண்டாகியிருப்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் கழித்த பிறகு கால்களிலும் கைகளிலும் வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வரும் போதுதான் இந்நோயை அறிய முடிகிறது. கடைசியிலே குணமாக்க முடியாத காலகட்டத்தை அடைந்துவிடுகிறது. கால்கள் யானைக் கால்களைப் போல பெருத்து, சீழ்வடிகிறது. 

பாருங்கள்! சின்ன கொசு எவ்வளவு பெரிய கொடுமையை செய்து விடுகிறது. கொசுவை அடித்தால் அப்படியே நசுங்கி செத்துபோகக்கூடிய மிக பலவீனமான ஒரு ஜந்துதான். ஆனால் கொசுக்கடியை நீங்கள் அசட்டைச் செய்யும்போது, வாழ்நாளெல்லாம் எத்தனை வேதனையை அனுபவிக்க வேண்டியதிருக்கிறது!

அதுபோலவே சிறு சிறு பாவங்கள்தானே என்று நீங்கள் அசட்டையாயிருக்கும்போது அது உங்களுக்குள் வந்து பெலன்கொள்ள ஆரம்பிக்கிறது. ஆத்துமாவும் நோய் கொள்ளுகிறது. முடிவில் ‘பாவம் செய்கிற ஆத்துமா சாகும்’ என்ற வார்த்தையின்படி செத்துப்போய் விடுகிறது. 

மான் காலாயிருக்க வேண்டிய உங்கள் கால்கள் யானைக் காலாய் மாறிக்கொண்டு வருகிறதா? தற்பரிசோதனைச் செய்ய இதுவே நல்ல தருணம். பாவமாகிய யானைக்கால் வியாதி குணமாகவேண்டுமென்றால் அதற்கு ஒரே டாக்டர் இயேசுகிறிஸ்துதான். அவருடைய இரத்தம்தான் சகல பாவக்கிருமிகளையும் நீக்கி உங்களைச் சுத்திகரிக்கும். 

போத்திபாரின் மனைவி யோசேப்புக்கு யானைக்கால் வியாதியைக் கொடுக்க ஆயத்தமாயிருந்தாள். ஆனால் அவனோ, ‘வேசித்தனத்திற்கு விலகி ஓடுங்கள்’ என்ற வார்த்தையின்படி தன் கால்களை மான் கால்களாக்கிக் கொண்டு தன் வஸ்திரம் போனாலும் பரவாயில்லை என்று ஓடிப்போனான். தேவபிள்ளைகளே, ஒவ்வொருநாளும் தேவசமுகத்தில் உங்களை ஆராந்துப் பாருங்கள். பாவ கொசு உங்கள்மேல் அமர இடம் கொடாதேயுங்கள். 

நினைவிற்கு:- "நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?" (சங். 56:13).