கர்த்தருக்குப் பயப்படுதல்!
"கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்" (சங். 25:12).
கர்த்தருக்குப் பயந்து நடப்பதினால் வரும் ஆசீர்வாதங்களை வேதம் அடுக்கடுக்காய் கூறுகிறது. அவை எண்ணற்றவை மற்றும், நித்தியமானவை. அந்த ஆசீர்வாதங்கள் பரலோகம் வரையிலும் எட்டுகின்றன. சரி கர்த்தருக்குப் பயப்படும் பயம் உங்களில் எப்படி பிரதிபலிக்க வேண்டும்? இதோ, நான்கு கருத்துக்களை உங்களுடைய தியானத்திற்காக வைக்கிறேன்.
முதலாவது பாவத்தை அருவருத்து விடுங்கள். "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்" (நீதி. 8:13) என்று வேதம் சொல்லுகிறது. பாவங்கள் மேல் ஒரு அருவருப்பைக் கொண்டு வாருங்கள். இச்சைகளைத் தூண்டும் நபர்களை பாம்பை பார்ப்பதைப் போல பாருங்கள். உங்களுடைய உள்ளத்திலே ‘கர்த்தரை மட்டும் நான் பிரியப்படுத்துவேன். எந்த அசுத்தமுள்ள நினைவுகளையும், செயல்களையும் எதிர்த்து நிற்பேன்’ என்று உறுதியான தீர்மானத்திற்குள் வாருங்கள். உங்களுடைய உள்ளத்தில் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் இருக்குமென்றால், அவரை நேசித்து உலக சிற்றின்பங்கள் மேல் கசப்பை வெளிக்கொண்டு வருவீர்கள்.
இரண்டாவதாக, கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிலே அர்ப்பணத்தைக் கொண்டு வருகிறது. அவருக்காக எதையும் அர்ப்பணிக்க, எதையும் ஒப்புக்கொடுக்க தீர்மானித்து விடுவீர்கள். வேதம் சொல்லுகிறது,"கர்த்தர் ஆபிரகாமைப் பார்த்துச் சொன்னார்: நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்" (ஆதி. 22:12). தேவ பயம் இருக்கிறது என்று எப்படி வெளிப்பட்டது? ஒப்புக் கொடுத்தலின் மூலமாக,அர்ப்பணித்தலின் வாயிலாகத்தான்.
மூன்றாவதாக ஆதரித்தல். 1 இராஜா. 18:4- முதல் 8-ம் வசனம் வரையிலான வேதப்பகுதியை வாசிக்கும்போது, அங்கே ஒபதியா என்ற தேவனுடைய மனுஷன் கர்த்தருக்குப் பயப்படுகிறதினாலே கர்த்தருடைய ஊழியத்தையும், ஊழியக்காரர்களையும் ஆதரித்தான். ஊழியக்காரரை போஷித்தான் என்றும் அறியலாம். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் கர்த்தருடைய ஊழியர்களை கனம் பண்ணுகிறார்கள். கர்த்தருடைய ஊழியர்களுக்கு தாராளமாய்க் கொடுத்து அவர்களுடைய குறைவை நிறைவாக்குகிறார்கள்.
நான்காவதாக, "கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும்,அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது" (சங். 19:9). அப்பழுக்கற்றதும், தூய்மையானதும், பரிசுத்தமானதும், குற்றஞ்சாட்டப்பட முடியாததுமான வாழ்க்கை வாழும்போது, நீங்கள் கர்த்தருக்குப் பயப்படுபவர் என்பது வெளிப்படுகிறது.
வேதம் முழுவதையும் வாசித்துப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட வார்த்தை திரும்பத் திரும்ப ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் வருகிறதைக் காணலாம். அது ‘நடப்பது’ என்பதாகும். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் நிச்சயமாகவே அவருடைய வழிகளில் நடப்பார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தருக்குப் பயந்து அவருடைய வழிகளில் நடப்பீர்களா?
நினைவிற்கு:- "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ் செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்" (லூக். 1:50,51).