மேன்மை பாராட்டும்!

"கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்" (சங். 34:2).

நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு கர்த்தரைத் துதிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். இந்த உலகத்திலே உங்களைச் சூழ ஏராளமான சிறுமைப்பட்ட ஜனங்கள் இருக்கிறார்கள். சிறுமைப்பட்டவர்களென்றால் வெறும் ஏழைகள் மாத்திரம்தான் என்று நீங்கள் எண்ணி விடக்கூடாது. 

பெரிய செல்வந்தர்களாயிருப்பார்கள், ஆனால் வயதான காலத்தில் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு சிறுமைப்பட்டுப் போயிருப்பார்கள். பெரிய மாம்பழத் தோட்டத்தை உண்டாக்கியிருந்திருப்பார்கள். ஆனால் அந்த இடத்தில் போய் ஒரு மாம்பழம் எடுத்து சாப்பிட உரிமை இருக்காது. அழகான வீட்டைக் கட்டியிருப்பார்கள். ஆனால் வியாதிப்பட்டு வீட்டுக்கு வெளியே கயிற்றுக் கட்டிலில் பரிதாபமாய்ப்படுத்திருப்பார்கள்! சிறுமைப்பட்ட ஜனங்கள் ஏராளம், ஏராளம்.

யோபு பக்தன் ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாய் வாழ்ந்தவர். அவர் கால்களை நெய்யிலே தோய்த்தவர். ஆனால் அவர் சிறுமைப்பட்டபோது சிறுவர்கள்கூட அவரைப் பரியாசம் பண்ணினார்கள். இழப்பிலும் வியாதியிலும் சிறுமை தொற்றிக் கொண்டது. இந்த சிறுமைப்பட்டவர்களை எப்படி ஆறுதல் செய்வது? எப்படி அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்குவது? தாவீது ராஜா அந்த வழியை நமக்கு கற்றுக் கொடுக்கிறார் அவர் சொல்கிறார், "நான் கர்த்தருக்குள் மேன்மை பாராட்டினேன். அதைக் கேட்டு சிறுமைப்பட்டவர்கள் மகிழ்ந்தார்கள். அது மாத்திரமல்ல, அவர்கள் கர்த்தரை நோக்கிப் பார்ப்பார்கள். பிரகாசமடைவார்கள்". சிறுமைப்பட்டவர்களின் வாழ்க்கையிலே எத்தனை மகிமையான மாறுதல்!

அமெரிக்க தேசத்திலே ஒரு பெரிய செல்வந்தர் இருந்தார். ஏறக்குறைய அறுபது ஏக்கர் நிலத்தை பயிர் செய்து விட்டு விளைச்சலை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். அந்தோ! திடீரென்று ஒரு கொடிய நோய் அந்த விளைச்சலைத் தாக்கியது. அரசாங்கம் அந்த நோயைப் பார்த்து விட்டு, தேசத்தின் பல இடங்களுக்கும் இந்தநோய் தொற்றி விடக் கூடியது என்று அத்தனை செடியிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்கள். அறுபது ஏக்கர் நிலமும் எரிந்து சாம்பலானது. தரையும் கெட்டது. அந்த செல்வந்தர் பெரும் நஷ்டமடைந்து பரிதாபமான நிலைமைக்கு வந்தார். தற்கொலை செய்து கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை என்று எண்ணினார்.

அந்த துயரமான சூழ்நிலையில் அவமானம் தாங்க முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தபோது, மன ஆறுதலுக்காக அவர் ஆலயத்திற்குச் சென்றார். கர்த்தரைத் துதித்த துதி அவருக்குள் ஒரு நம்பிக்கையை உண்டாக்கியது. சிறுமைப்பட்ட அவர் மகிழ்ந்தார். அவர் மிக வேகமாய் மீண்டும் முன்னேறி, முந்திய சீரையும் சிறப்பையும் பெற்றுக் கொண்டார். ஆம், நீங்கள் கர்த்தரை மேன்மை பாராட்டும்போது சிறுமைப்பட்ட நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்.

  நம் ஆண்டவர் சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் (2 கொரி. 7:6). சகலவிதமான ஆறுதலின் தேவன் (2 கொரி. 1:3) என்று அழைக்கப்படுகிறார். எல்லாவிதத்திலும் அவர் சிறுமையை அனுபவித்தார். தேவபிள்ளைகளே, அந்தச் சிறுமைப்பட்ட தேவனே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். உங்களுடைய சிறுமையையெல்லாம் மாற்றுகிறவர்.

நினைவிற்கு:- "ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்" (எபி. 2:18).