பூர்வ கால ராஜா!
"...தேவன் பூர்வ காலமுதல் என்னுடைய ராஜா" (சங். 74:12).
‘நீர் என்னுடைய ராஜா; என்னை ஆளுகிறவர்; என்னை பொறுப்பெடுத்திருக்கிறவர்; நீர் எனக்காக யாவையும் செய்து முடிக்கிறவர்’ என்று சொல்லி கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள். தாவீது எத்தனை அன்போடு "பூர்வ காலமுதல் நீரே என்னுடைய ராஜா" என்று சொல்லி அகமகிழுகிறார் பாருங்கள்!
உலகத்தில் பல ராஜாக்களுண்டு; ராஜ்யங்களுண்டு. சில தோன்றுகின்றன. உடனே மறைந்து போகின்றன. அவைகளின் ஆளுகைகள் நீடித்திருப்பதில்லை. ஆனால், நம் கர்த்தரோ ஆதிமுதல் ராஜாவாயிருக்கிறார். மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும் ஆளும் அன்புள்ள ராஜாவாயிருக்கிறார். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை ஆளும்படி அவருடைய கரத்தில் உங்களைத் தாழ்த்தி ஒப்புக்கொடுப்பீர்களா? அவரே உங்களை ஆளட்டும்.
இன்று உலகத்தாரைப் பாருங்கள். பலர் இச்சைகளினால் ஆளப்படுகிறார்கள். சிலர் உள் உணர்வுகளினால் ஆளப்படுகிறார்கள். சிலர் மற்றவர்களால் ஆளப்படுகிறார்கள். கொடிய பார்வோன் இஸ்ரவேலரை அடிமையாக்கி ஆண்டது போல பலவித பாவ பழக்கங்கள், சாத்தானாக ஜனங்களை அடிமையாக்கி ஆண்டு கொண்டிருக்கின்றன.
ஏசாயா சொல்லுகிறார், "எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம். அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்க மாட்டார்கள்; மாண்ட ராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்; நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர்" (ஏசா. 26:13,14).
தேவபிள்ளைகளே, பொன்னோ, பொருளோ, செல்வமோ, செல்வாக்கோ உங்களை ஆளுகை செய்ய அனுமதியாமல், கர்த்தரையே ராஜாவாக ஆளுகை செய்யும்படி உங்களை ஒப்புக்கொடுங்கள். ஒவ்வொரு நொடிப்பொழுதும், உங்கள் நினைவுகளையும், செயல்களையும் ஆளுகிற ராஜாவாக கர்த்தர் இருப்பாராக.
அவர் பூர்வ கால ராஜா மாத்திரமல்ல, சதாகாலத்திற்கும் அவரே ராஜாவாக இருக்கிறார். கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாக இருக்கிறார் (சங். 10:16). சதாகாலமும் ஆளுகை அவருடையதுதான். இருக்கிறவரும், இருந்தவரும், வரப்போகிறவருமான ராஜா. ஆதி முதல் இருந்த ராஜா, இனிமேலும் ஆளுகை செய்யப்போகிற ராஜா.
நம் தேவன் பூர்வகால ராஜா, சதாகால ராஜா, என்றெல்லாம் மாத்திரமல்ல, நித்திய ராஜா என்றும் அழைக்கப்படுகிறார். அவர் நித்தியானந்த சக்கராதிபதி (1 தீமோ. 6:15). நித்திய நித்தியமாய் ஜீவிக்கிறவர் என்பது அதனுடைய அர்த்தம். ஆம், அவருடைய அரசாட்சிக்கு முடிவேயிராது. அந்த அரசாட்சி உறுதியானது.
வெளிப்படுத்தின விசேஷத்திலே, அவர் பரலோக ராஜ்யத்தில் வெள்ளை சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா, தேவாதி தேவன் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம். தேவபிள்ளைகளே, எப்பொழுதும் நீங்கள் கர்த்தரை ஸ்தோத்தரித்து கனப்படுத்துங்கள். சகல கனத்தையும், மகிமையையும் பூர்வகால ராஜாவுக்கே செலுத்துங்கள்.
நினைவிற்கு:- "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக" (வெளி.1:6).