வஸ்திரம் வேகாமல்!
"தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக் கொள்ளக்கூடுமோ? தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?" (நீதி. 6:27,28).
பரிசுத்த வாழ்க்கையைக் குறித்து நீங்கள் ஜாக்கிரதையுள்ளவர்களாயிருக்க வேண்டும். அசுத்தமான உறவுகள், சம்பாஷனைகள், கடிதத் தொடர்புகளெல்லாம், உங்கள் மடியிலே நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதற்கு சமானமாகும்.
பராக்கிரமசாலியும், நியாயாதிபதியுமான சிம்சோன், புத்தியீனனாய் தன் மடியிலே அக்கினியைக் கட்டிக்கொண்டு படுத்திருந்தான். தெலீலாளின் மடியிலே உறங்கிக் கொண்டிருந்தான். வேதம் சொல்லுகிறது, "அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று. ....அவன் நித்திரை விட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்" (நியாயா. 16:19,20).
பாவத்தோடு விளையாடின ஒரு தேவ மனிதனைக் குறித்து இங்கே வாசிக்கிறோம். அவனுடைய வீழ்ச்சி வேகமாக வந்தது. ‘தன் வஸ்திரம் வேகாமல் எவனாவது மடியிலே நெருப்பை வைத்துக்கொள்ள முடியுமோ’ என்று வேதம் கேட்கிறது.
அவன் தன் பாவத்தை உணராமல் ‘நான் எப்போதும்போல உதறிவிட்டுப் போவேன்’ என்று சொன்னான். தன் கடந்தகால வெற்றியைச் சார்ந்திருந்த அவன், நிகழ்காலத்திலே பாவத்தில் விழுந்தான். அந்தோ! பெலிஸ்தியர் வந்து அவனைப் பிடித்துக்கொண்டார்கள். "எப்பொழுதும் போல" அவன் ஜெயம் பெறவில்லை. அவனுடைய கண்களை பிடுங்கி எடுத்தார்கள்.
கடந்தகால வெற்றியில் சார்ந்திருக்கிற நிலையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். நேற்றைய வெற்றி உங்களை உற்சாகப்படுத்தலாம். ஆனால் அது நாளைய வெற்றிக்கு ஆதாரமாயிருப்பதில்லை. "எப்போதும் போல உதறிவிட்டுப் போவேன்" என்று எண்ணினால் அகப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். நாளையத்தின வெற்றிக்கு ஒரே அடையாளம், இன்று நீங்கள் வாழும் பரிசுத்த வாழ்க்கையே.
ஒரு தவளையைப் பிடித்து கொதி தண்ணீரில் தூக்கிப்போட்டால், வெப்பம் தாங்க முடியாமல் உடனே வெளியே குதித்துவிடும். ஆனால் அதே தவளையை மிக குளிர்ந்த தண்ணீரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சூடாக்கிக் கொண்டிருந்தால், இளம் சூடு நன்றாயிருக்கிறது என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும். வெளியே வராது. முடிவிலே வெப்பத்தினால் அது மடிந்துபோகும்.
அந்த மதியீனமான தவளையைப் போலத்தான் சிம்சோன் தனது மடியில் அக்கினியை வைத்துக்கொண்டு பாவத்தோடு விளையாடிக் கொண்டிருந்தான். தனக்கு எதிரிகளுண்டு, சத்துருக்களுண்டு, பெலிஸ்தியர் தன்னை வீழ்த்த கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் என்பதையெல்லாம் சிந்தியாமல் போனான். அன்றைக்கு சிம்சோனுக்கு பெலிஸ்தியர் இருந்ததுபோல உங்களுக்கும் சத்துருக்களிருக்கிறார்கள். எப்போது உங்கள்மீது குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று ஆவல்கொண்ட ஜனங்களிருக்கிறார்கள். பாவத்தில் தள்ளிவிட சாத்தான் இருக்கிறான். தேவபிள்ளைகளே, உலக ஆசைகள் உங்களைத் துக்கத்துக்கு இழுத்துக் கொண்டு போவிடாதபடி விழித்திருங்கள்.
நினைவிற்கு:- "கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்" (சங். 27:11).