மனம் மகிழும்.!
"உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்" (யாத்.4:14).
நம்முடைய வீடுகளுக்கு அநேகர் வருகை தந்தாலும் ஒருசிலரைக் கண்டால் மட்டும் நம்முடைய இருதயம் மகிழ்ந்து களிகூருகிறது. மிகவும் முக மலர்ச்சியோடு அவர்களை உபசரிக்கிறோம். ஆனால், வேறு சிலர் வந்துவிட்டால் உள்ளத்தில் கலக்கம் ஏற்படுகிறது. ஐயோ, வீட்டிற்கு வருகிறார்களே, என்ன குழப்பத்தை ஏற்படுத்துவார்களோ, என்ன சண்டையை மூட்டி விட்டுச் செல்வார்களோ, அமைதியை கெடுத்து விடுவார்களோ என்றெல்லாம் கலங்குகிறோம்.
அன்று மோசேயைப் பார்க்க ஆரோன் வருகிறதைக் குறித்து கர்த்தர், ‘அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்’ என்றார். ஒரே பரம தகப்பனின் பிள்ளைகளாக இருந்து, ஒரே கல்வாரி அன்பினால் தாகம் தீர்க்கப்பட்டு, ஒரே ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் ஒருவரையொருவர் காணும்போது களிகூர்ந்து மகிழுவது இயற்கைதானே? தாவீது ராஜா சொல்லுகிறார்: "இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது" (சங்.133:1).
அன்று மோசேயைக் கண்டு ஆரோன் மனம் மகிழ்ந்ததைப் போலவே இயேசுவின் தாயாகிய மரியாளைக் கண்டு எலிசபெத்தின் உள்ளம் களிகூர்ந்தது. அவள் மாத்திரமல்ல, அவளுடைய வயிற்றில் இருந்த பிள்ளையும் துள்ளிற்று என்று வேதம் சொல்லுகிறது. "சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாள்" (லூக்.1:40,41).
தேவனுடைய பிள்ளைகள் ஒருவரையொருவர் வாழ்த்தும்போது, ஒருவரோடொருவர் கைகளை கோர்த்து தேவனை மகிமைப்படுத்தும்போது, உள்ளம் மட்டுமல்ல, நம்முடைய ஒவ்வொரு அவயவங்களும் மகிழ்ந்து களிகூருகிறது.
மோசேயை கண்டவுடன் ஆரோனுடைய உள்ளத்தில் அன்பும் மகிழ்ச்சியும் பொங்கின. அதோடல்லாமல் மோசேயின் அருகில் வந்து அவனை முத்தஞ் செய்தான் (யாத். 4:27). இதைப் பார்த்த மற்றவர்களின் உள்ளத்திலும்கூட ஒரு தெய்வீக அன்பு பெருகுமல்லவா? ஆகவேதான் அப். பவுல், "ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்" என்று குறிப்பிடுகிறார் (ரோமர் 16:16, 1பேது. 5:14).
அன்புக் குறைவுதான் இன்று உங்களுக்குள் காணப்படும் பெரிய குறைபாடாய் இருக்கிறது. விசுவாசிகளானாலும் சரி, ஊழியர்களானாலும் சரி ஒருவரையொருவர் காணும்போது அவர்களுடைய இருதயம் மகிழுவதில்லை. சபை பாகுபாடு என்ற பெயரில் ஒருவரையொருவர் பகைக்கிறார்கள். ஆவிக்குரிய பெருமையடைந்து கிறிஸ்துவுக்குள் சிறிய சகோதரர்களை அற்பமாய் எண்ணுகிறார்கள்.
தேவபிள்ளைகளே, கல்வாரி இரத்தம் உங்களை விலைக்கு வாங்கினதைப் போலவே, தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் விலைக்கு வாங்கியிருக்கிறது. ஒவ்வொரு சபைப் பிரிவிலும் உண்மையான தேவனுடைய பிள்ளைகள், ஜெபவீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளைக் காணும்போது உங்களுடைய உள்ளம் அகமகிழட்டும்.
நினைவிற்கு:- "அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ் செய்தான்" (லூக். 15:20).