நித்தமும் வாசற்படியில்!

"என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்" (நீதி. 8:34).

கர்த்தர் உங்களோடுகூட பேச ஆயத்தமாயிருக்கிறார். நீங்கள் கேட்க ஆயத்தமாயும்,  தகுதியுள்ளவர்களுமாயிருக்கிறீர்களா? அநேகர் ஆலயத்திற்கு வருவார்கள். ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்க விருப்பப்படுவார்கள். "கர்த்தர் உங்களுக்குச் செழுமையை கட்டளையிடுகிறார்" என்று சொன்னால், "அல்லேலூயா" என்று சொல்லுவார்கள்.

ஆனால் யாராவது அவர்களுடைய பாவங்களைக் கண்டித்துப் பேசிவிட்டால் அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. தங்களுடைய வாழ்க்கையைச் சீர்திருத்திக்கொள்ள அவர்களுக்குப் பிரியமிருப்பதில்லை. கர்த்தர் பேசும்போது ஆலோசனைகள் மாத்திரமல்ல, சில வேளைகளில் கடிந்துகொள்ளுகிற வார்த்தைகளையுங்கூட பேசுவார்.

ஞானி சொல்லுகிறார், "ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்" (நீதி. 15:31). தேவபிள்ளைகளே, கர்த்தர் பேசும்போது, "கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்" என்று சொல்லி உங்களைத் தாழ்த்தி சிட்சிக்கிற செய்தியைக்கூட கவனமாகக் கேட்பீர்களா? அப்பொழுது கர்த்தர் மனம் திறந்து மறை பொருட்களை வெளிப்படுத்தி பேசுவார்.

மரியாளைப் பாருங்கள்! கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்கும்படிக்கு எத்தனை ஆர்வத்தோடுகூட கிறிஸ்துவினுடைய பாதத்தண்டை வந்து அமர்ந்திருந்தாள். வேறு எதுவுமே அவளுக்கு முக்கியமானதாகப்படவில்லை. வேதம் சொல்லுகிறது, "மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள்" (லூக். 10:39). அதன் மூலம் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள்.

அது எத்தனை இனிமையான அனுபவம்! அதை உங்களுடைய மனக்கண்களின் முன்பாகக் கொண்டு வாருங்கள். இயேசு நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார். அவருடைய குரலுக்காக மரியாள் ஏங்கி அமர்ந்திருந்த இடத்திலே இப்பொழுது நீங்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள். அவர் உங்களோடுகூட பேச விரும்புகிறார் எவ்வளவு இனிமையாய் இருக்கும்!

கர்த்தருடைய வார்த்தைகளை உங்களுடைய உள்ளம் உள்வாங்கிக்கொள்ளும்போது, நீங்கள் கனி கொடுக்கிறவர்களாய், கர்த்தருக்காக பலன் கொடுக்கிறவர்களாய் காணப்படுவீர்கள். வேதம் சொல்லுகிறது: "நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான்" (மத். 13:23). "நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களா யிருக்கிறார்கள்" (லூக். 8:15).

தேவபிள்ளைகளே, கர்த்தர் பேசுகிறதைக் கேட்பதோடல்லாமல், நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு பலன் கொடுக்கிறவர்களாகவும் விளங்கவேண்டும். கர்த்தர் உங்களோடுகூட  பலவிதங்களில் பேசுவார். உங்களுடைய உள்ளத்தில் வாஞ்சையும், தாகமும், எதிர்பார்ப்பும் இருக்குமானால் கர்த்தர் நிச்சயம் உங்களோடுகூட பேசுவார். கர்த்தர் உங்களோடு பேச மிகவும் ஆவலுள்ளவராயிருக்கிறார்.

நினைவிற்கு:- "இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது" (எசேக். 43:2).