நீதிமானின் விருப்பம்!

"நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். நீதிமான்களுடைய ஆசை நன்மையே" (நீதி. 10:24; 11:23).

வேதம் சொல்லுகிறது, "ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்" (1 கொரி. 6:11). நீங்களும் அவ்விதமாக நீதிமான் களாக்கப்பட்டிருப்பீர்களானால், உங்களுடைய விருப்பங்களும் நீதிமான்களின் விருப்பங்களாகவேயிருக்கும்.

ஒரு நீதிமானுடைய மேன்மையான விருப்பம் என்ன? கர்த்தரைக் காணவேண்டும், அவரோடு பேச வேண்டும், அவருடைய சமுகத்தில் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்க வேண்டுமென்று விரும்புவான். சங்கீதக்காரனாகிய ஆசாப் சொல்லுகிறார், "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை" (சங். 73 :25).

கல்வாரி அன்பை ருசித்தவர்களுக்கு அவரைத் தவிர இம்மையிலும், மறுமையிலும் வேறு ஆசையும் விருப்பமும் இருக்க முடியாது. "கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி சேயும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்" (சங். 27:4) என்று தாவீது எழுதுகிறார்.

அவருடைய வாஞ்சை கர்த்தர் மேல் மட்டுமல்ல, அவருடைய ஆலயத்தின் மேலும் இருந்தது. நீங்களும் கர்த்தருடைய ஆலயத்தை நாடுவீர்களா? அவருடைய ஆலயத்தின் நன்மையினால் திருப்தியடைவீர்களா? நீதிமானின் விருப்பங்களை  நிறைவேற்றி அவர்கள் விரும்புகிற காரியத்தை கொடுக்கும் கர்த்தர், உங்களுடைய விருப்பத்தையும் நிறைவேற்றுவார்.

சாலொமோனின் விருப்பம் ஞானமாயிருந்தது. கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார் (1 இரா. 3:5). இளமையில் இஸ்ரவேல் ஜனத்திற்கு ராஜாவாக அபிஷேகிக்கப்பட்ட சாலொமோன் கர்த்தரிடத்தில் நீடித்த நாட்களையும், ஐசுவரியத்தையும் கேளாமல், ஜனத்தை நியாயம் விசாரிக்கும்படி ஞானமுள்ள இருதயத்தைக் கேட்டார். கர்த்தர் அவனுக்கு ஞானத்தைக் கொடுத்ததுமல்லாமல் அவன் கேளாத ஐசுவரியத்தையும், மகிமையையும்கூடக் கொடுத்தார்.

தேவனுடைய மகிமையை காண வேண்டும் என்பதே மோசேயின் விருப்பமாயிருந்தது. "உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்" (யாத். 33:18). கர்த்தர் மோசேயின் விருப்பத்தை அறிந்து அந்த மகிமையின் ஒரு பகுதியை அவனுக்கு காண்பிக்க சித்தமானார். மோசே தேவனுடைய மகிமையை தரிசித்தார்.

எலிசாவின் விருப்பம் என்ன? எலியாவின் மேலிருந்த ஆவியின் வரத்தை இரட்டிப்பாகப் பெற விரும்பினார். அவர் விரும்பியபடியே அந்த ஆவியின்வரம் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆகவே எலியா செய்ததைக் காட்டிலும் இரண்டு மடங்கு அற்புதங்களை அவர் அந்த ஆவியின் வரத்தால் செய்தார். தேவ பிள்ளைகளே, உங்களை நீதிமான்களாக்குகிற கர்த்தரிடத்தில் உங்கள் விருப்பங்களைத் தெரிவியுங்கள்.

நினைவிற்கு:- "நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்" (கொலோ. 3 : 1,2).