செழிக்கும்!
"உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்" (நீதி. 11:25).
நீங்கள் ஆவிக்குரிய பிரகாரமாகவும், உலகப்பிரகாரமாகவும் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றால், உங்களுக்கு உதாரகுணம் அவசியம். கர்த்தர் உதாரகுணமுள்ளவர் அல்லவா? ஆகவே அவர் உதாரகுணமுள்ள ஆத்துமாக்களை செழிக்கப்பண்ணுகிறார்.
கர்த்தர் உங்களுக்காக உலகத்தையும், அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார். நீங்கள் சுவாசிக்க நல்ல காற்றையும், குடிக்க நல்ல தண்ணீரையும், நல்ல ஆகாரத்தையும் கொடுத்தார். மிருக ஜீவன்களை, பறவைகளைக் கொடுத்தார். ஆளுகையையும் அதிகாரத்தையும் கொடுத்தார். கல்வாரி சிலுவையில் தன்னையே கொடுத்தார். நித்தியத்தில் வாசஸ்தலங்களையும் கொடுப்பார். அவர் எவ்வளவு உதாரகுணமுள்ளவர்!
அவருக்கு நீங்கள் என்ன கொடுக்க வேண்டும்? ஆம், உங்களுடைய முழு இருதயத்தையும் அவருக்குக் கொடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை அவரிடத்தில் ஒப்புவிக்க வேண்டும். உங்களுடைய நேரங்கள், திறமைகள், தாலந்துகள் எல்லாவற்றையும் அவருக்கென்று சந்தோஷமாய் கொடுக்க வேண்டும். அது எத்தனை பெரிய ஆசீர்வாதம்! "பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்" (3 யோவா. 1:2) என்று வேதம் சொல்லுகிறது.
நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க வேண்டும் என்பதுதான் அன்புள்ள பரம தகப்பனின் வாஞ்சையும் விருப்பமுமாகும். அவர் உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் உங்களை ஆசீர்வதிக்கிறார். ஆவிக்குரிய வரங்களையும் கனிகளையும் தந்தருளுகிறார். அவர் உங்களுக்குக் கொடுக்கிறதுபோல நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது இன்னும் அதிகமாய் செழிப்படைவீர்கள். வேதம் சொல்லுகிறது, "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்" (லூக்கா 6:38).
நீங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும்போது, உற்சாகமாய், மனப்பூர்வமாய், சந்தோஷமாய் கொடுக்காததினாலே கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பூரணமாக அனுபவிக்க முடியாமலிருக்கிறது. வேதம் சொல்லுகிறது, "அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு" (நீதி. 11:24). கஞ்சத்தனமும், மற்றவர்களுக்கு ஈயாக்குணமும் வறுமையைக் கொண்டு வந்து விடுகிறது.
உங்களுடைய இனத்தவர்களில் எத்தனையோ பேர் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடும். உங்கள் சபையிலும் வறுமையால் வாடுகிற பல விசுவாசிகளை நீங்கள் காணக்கூடும். உங்களால் முடிந்தவரை அவர்களுக்கு உதாரத்துவமாய் கொடுங்கள். வேதம் சொல்லுகிறது: "ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்" (1 தீமோ. 5:8).
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய சுவிசேஷம் பரவுவதற்கும், ஜனங்கள் இரட்சிக்கப்படுவதற்கும் கர்த்தருக்கென்று கொடுப்பது எத்தனை பாக்கியமான அனுபவம்! நீங்கள் கர்த்தருக்கென்று கொடுக்கும்போது கர்த்தர் ஆயிரம் மடங்காய் அதைத் திருப்பித் தருவார். வானத்தின் பலகணிகளைத் திறந்தருளுவார்.
நினைவிற்கு:- "சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான்...." (மத். 10:42).