கவலையிலும் மகிழ்ச்சி!

"மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்" (நீதி. 12:25).

கவலை ஒரு மனுஷனுடைய வாழ்க்கையை ஒடுக்கும் என்பதற்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். ஒரு தத்துவ ஞானி, "கடவுள் எவ்வாறு சர்வ வல்லமையுள்ளவராக இருக்கிறாரோ, அப்படியே கவலை சர்வ அழிவுள்ளதாக இருக்கிறது"  என்று சொன்னார்.

கவலைக்கு மாற்று மருந்தை மேலே சொன்ன வசனம் உங்களுக்குத் தருகிறது. "நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்." இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், ‘இயேசு கிறிஸ்துவின் நல்வார்த்தைகளே கவலையை நீக்கி உங்களை மகிழ்ச்சியாக்கும்’ எனலாம். இயேசுவின் நல்வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள். கவலையோடு, மரண பயத்தோடு நடுங்கிக் கொண்டிருந்த விபச்சார ஸ்திரீயைப் பார்த்து, "நீ போ, இனிப் பாவஞ் செய்யாதே" (யோவா. 8:11) என்று அன்போடு சொல்லி அனுப்பினார். அன்றே அவளது வாழ்க்கை கவலை நீங்கியதாகவும்,  மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாறியது.

ஒரு தகப்பன் தன் பிள்ளையை குறித்த கவலையோடு இயேசுவிடம் ஓடி வந்தபோது, இயேசு சொன்னார், "நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான்" (யோவா. 4:50). கவலை நீங்கியது; குமாரன் பிழைத்தான். கவலை சூழும்போது, வேத புத்தகத்தை எடுத்து இயேசுவின் நல்வார்த்தைகளை வாசியுங்கள். அவைகளெல்லாம் உங்களை ஆறுதல்படுத்துவதற்காகவே எழுதப்பட்டிருக்கின்றன. வேதம் சொல்லுகிறது, "ஆகையால், என்னத்தை உண்போம். என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்" (மத். 6:31).

இந்த வசனங்களிலிருந்து அப். பவுல் கற்றுக்கொண்ட ஒரு இனிமையான பாடம் உண்டு. அது என்ன? எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன் என்பதேயாகும் (பிலி. 4:11). அதுதான் சந்தோஷத்தின் இரகசியம். எந்த நிலைமையிலும் மனரம்மியமான வாழ்க்கை, கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அழகும் மேன்மையுமாகும். ஆம், மனரம்மியமே மனமகிழ்ச்சியைத் தரும்.

அப். பவுல், சொல்லுகிறார், "தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்" (பிலி. 4:12). சாலொமோன் ஞானி சிறியதான நீதி மொழிகளின்  மூலமாக மகிழ்ச்சியின் இரகசியங்களை பல இடங்களில் பேசுகிறார். "மனரம்மியமோ நித்திய விருந்து" (நீதி. 15:15). "மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்" (நீதி. 15:13).

மனமகிழ்ச்சியாயிருக்கிற மனுஷனை எல்லோரும் விரும்புவார்கள். முகமலர்ச்சியாய் இருக்கிற எந்த வியாபாரியும் தன் பொருட்களை மிக சீக்கிரமாய் விற்றுவிடுவான். முகமலர்ச்சியுள்ள டாக்டரை நோக்கித்தான் நோயாளிகளும் செல்லுவார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்காக ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டுமென்றால் மனமகிழ்ச்சியுடனும், முகமலர்ச்சியுடனும் இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம்!

நினைவிற்கு:- "....நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக" (உபா. 12:7).