கிறிஸ்துவின் சமுகம்!
"கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்" (சங்.105:4).
கர்த்தருடைய சமுகமும், பிரசன்னமும் ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தேவை. இந்த உலகத்தில் அதுதான் மிகவும் விலையேறப் பெற்றதும் மிகவும் அருமையானதும், மேன்மையானதுமாயிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தேவ பிரசன்னத்தை நீங்கள் இழந்துவிடவே கூடாது.
ஒரு பக்தன் சொன்னார்: "கோடி ரூபாய் நஷ்டமானாலும் அதை நான் பொறுத்துக் கொள்ளுவேன். ஆனால் தேவ சமுகத்தை இழக்கவே மாட்டேன். ஆயிரமாயிரமான நண்பர்களை இழந்துவிட்டாலும் அதைக் குறித்து கவலைப் படமாட்டேன். ஆனால் என் அன்பு இரட்சகரின் பிரசன்னத்தை இழக்க நான் சம்மதிக்கவேமாட்டேன். என் சரீர ஆரோக்கியத்தை இழந்து போனாலும், என் அன்பருடைய சந்நிதானத்தை விட்டு நீங்கவேமாட்டேன்" என்றார்.
ஓசியா தீர்க்கதரிசி, "...நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்" (ஓசியா 6:2) என்று குறிப்பிடுகிறார். அவருடைய சமுகத்தை உணருகிறவர்கள் பூமியிலும் பிழைத்திருப்பார்கள் நித்தியத்திலும் பிழைத்திருப்பார்கள். தேவனுடைய சமுகம் உங்களை விட்டு பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கட்டும்.
தேவனுடைய சமுகத்திலே வல்லமையும், பராக்கிரமமுமுண்டு! எப்பொழுதெல்லாம் தேவனுடைய சமுகத்தை நீங்கள் உணருகிறீர்களோ அப்பொழுதெல்லாம் கர்த்தருடைய பெலனும், வல்லமையும் அளவிடாததாயிருக்கும். அன்று மோசே அந்த வல்லமையை எதிர்பார்த்தார். உம்முடைய சமுகம் எங்களுக்கு முன் செல்ல வேண்டுமென்று கூறி ஜெபித்தார். அந்த தேவ சமுகத்தின் வல்லமை இருந்தால்தான் கானானிலுள்ள ஏழு ஜாதிகளையும், முப்பத்தியொரு ராஜாக்களையும் மேற்கொள்ள அவரால் முடியும்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்படும்போது தேவ சமுகத்தோடு புறப்பட்டு வந்தார்கள். ஆகையால்தான் செங்கடல் பிரிந்து அவர்களுக்கு வழிவிட்டது. தேவ சமுகத்தின் வல்லமை பார்வோனையும், அவனுடைய சேனையையும் சமுத்திரத்திற்குள் மூழ்கச்செய்தது. தேவ சமுகம் என்றால் என்ன, அதன் வல்லமை எப்படிப்பட்டது, என்பதை இஸ்ரவேலர் புரிந்து கொள்ளும்படி கர்த்தர் மேக ஸ்தம்பங்களைக் காண்பித்தார். இரவிலே அக்கினி ஸ்தம்பங்களைக் காண்பித்தார். அதைப் பார்க்கும்போதெல்லாம் இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தேவனுடைய சமுகம் தங்களைச் சூழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்கள்.
அந்த தேவ சமுகம் அவர்களோடு இருந்தததினால் வனாந்திரத்திலுள்ள பொல்லாத மிருகங்களும், விஷ ஜந்துக்களும் அவர்களுக்கு தீங்கு செய்ய முடியவில்லை. மேக ஸ்தம்பத்தையும், அக்கினி ஸ்தம்பத்தையும் பார்த்து பயந்து ஓடின. காரணம், அவருடைய சமுகத்தில் வல்லமையும் பராக்கிரமமுமுண்டு.
இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் அண்டை வந்தபோது தேவனுடைய சமுகம் அவர்களுக்கு முன் சென்றதினால் யோர்தான் பின்னிட்டு திரும்பினது. எரிகோ மதில் நொறுங்கி விழுந்தது. செல்லுகிற இடங்களிலெல்லாம் வெற்றியை சுதந்தரித்தார்கள்.
தேவபிள்ளைகளே, ஒவ்வொரு நிமிடமும் தேவனுடைய பிரசன்னத்தையும், சமுகத்தையும் வாஞ்சித்து கதறுங்கள். வெளியே புறப்படும்போதெல்லாம் கர்த்தாவே, உம்முடைய சமுகம் என்னோடு வரவேண்டுமென்று சொல்லுங்கள். கர்த்தர் உங்களோடு வருவார்.
நினைவிற்கு:- "நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் பண்ணுவார்கள்" (சங்.140:13).