கிறிஸ்துவின் சரீரம்!

"நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்" (1 கொரி. 12:27).

கிறிஸ்தவ மார்க்கத்திலே கர்த்தருக்கும், உங்களுக்குமிடையில் மேன்மையான உறவு முறைகள் இருக்கின்றன. அவர் சிருஷ்டிகர், நீங்கள் சிருஷ்டி. அவர் தகப்பன், நீங்கள் பிள்ளைகள். அவர் மேய்ப்பன், நீங்கள் ஆடுகள். மட்டுமல்ல, அவர் உங்களுடைய தலையானவர். நீங்கள் அவருடைய சரீரம்.

தலையில்தான் மூளையிருக்கிறது. அது இடும் உத்தரவைதான் சரீரம் நிறைவேற்றுகிறது. தலையில்தான் ஞானம், அறிவு எல்லாம் அடங்கியிருக்கிறது. வேதம் சொல்லுகிறது,  "தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது" (கொலோ 2:9). கிறிஸ்து உங்களுடைய தலையானவர்.

பழைய ஏற்பாட்டிலே ஆரோனுடைய சிரசாகிய தலையில் அபிஷேகம் ஊற்றப்பட்டபோது, அது தாடி மற்றும் அங்கிகளின் வழியாய் இறங்கி வந்தது. புதிய ஏற்பாட்டிலே கிறிஸ்துவாகிய தலையில் அளவற்ற அபிஷேகம் ஊற்றப்பட்டபோது, அது அவரோடு நின்றுவிடவில்லை. அவருடைய சரீரமாகிய சபையின் மூலம் இறங்கி வந்தது. மேல் வீட்டறையிலே காத்திருந்து ஜெபித்த 120 பேரையும் அந்த அபிஷேக தைலம் நனைத்தது.

தலையாகிய கிறிஸ்து, உலகத்தையும், சபைகளையும் சரீரமாகிய உங்களுடைய காலின் கீழ்ப்படித்தியிருக்கிறார். உங்களுக்கு ஆளுகையையும், அதிகாரத்தையும் தந்திருக்கிறார். வேதம் சொல்லுகிறது, "எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றுக்கும் மேலான தலையாக தந்தருளினார்" (எபே. 1:22,23).

தலையாகிய கிறிஸ்து சாதாரணமானவரல்ல. மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டவர். கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவர். அப்படியானால் அவருடைய சரீரமும் சாதாரணமான சரீரமல்ல. நீங்கள் விசேஷமானவர்கள், ஏனென்றால் தலைக்கும், சரீரத்திற்கும் இடையேயுள்ள ஐக்கியத்தை யாராலும் பிரிக்கவே முடியாது.

இயேசு கிறிஸ்துவினுடைய சிரசு பரலோகத்திலிருக்கிறது. அவருடைய பாதமோ பூமியிலிருக்கிறது. அவருடைய வஸ்திர தொங்கல் தேவாலயத்தை நிரப்பி மூடிக் கொண்டிருக்கிறது. உங்களுடைய கரங்களோ கிறிஸ்துவின் கரங்கள். நீங்கள் வியாதியஸ்தர்களுக்காக பாரத்தோடு கைகளை வைத்து ஜெபிக்கும்போது, கிறிஸ்துவின் கரங்களிலிருந்து வல்லமையைப் பெற்று உங்கள் கரங்கள் அந்த வியாதிகளை குணமாக்குகிறது. உங்களுடைய கால்கள்தான் கிறிஸ்துவின் கால்கள். மனதுருக்கத்தோடு ஆத்தும பாரத்தோடு நீங்கள் நடந்து செல்லும்போது, கிறிஸ்துவின் பாதங்கள் உங்களைத் தொடர்ந்து வருகிறது.

இயேசு கிறிஸ்து பிதாவினுடைய வலது பாரிசத்திற்கு செல்ல கடந்து போயிருந்தாலும் அவருடைய சரீரமோ இன்னும் பூமியில்தான் இருக்கிறது. கிறிஸ்துவின் இரண்டாவது வருகை வரையிலும் கிறிஸ்துவினுடைய பணியை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய வேண்டும். பிரச்சனையில் வாடுகிற மக்களுக்கு கிறிஸ்துவின் நாமத்தில் விடுதலைக் கூறவேண்டும். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய சரீரமாயிருக்கிறதினால், அவரை விசுவாசத்தோடு ஸ்தோத்தரிப்பீர்களாக!

நினைவிற்கு:- "நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்" (1கொரி. 12:13).