கிறிஸ்துவின் அன்பு!

"கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது" (2 கொரி. 5:14).

புவிஈர்ப்பு விசைக்கு ஒரு வல்லமையுண்டு. அது ஒவ்வொரு பொருளையும் பூமியை நோக்கி இழுக்கிறது. புது திராட்சரசத்திற்கு ஒரு வல்லமையுண்டு. அது புது துருத்தி முதலாய் பீறப்பண்ணுகிறது. அதுபோலவே கிறிஸ்துவின் அன்புக்கு ஒரு வல்லமையுண்டு. அந்த வல்லமை உங்கள் உள்ளங்களை நெருக்கி ஏவுகிறது.

அப்போஸ்தலர்களைப் பாருங்கள். அவர்கள் பணத்திற்காகவோ, புகழுக்காகவோ ஊழியம் செய்யவில்லை. கிறிஸ்துவின் அன்பு நெருக்கி ஏவினதால் ஊழியம் செய்தார்கள். பிரச்சனைகளும், பாடுகளும் வந்தபோதுகூட, ‘கிறிஸ்துவினுடைய அன்பைவிட்டு எங்களைப் பிரிப்பவன் யார்?’ என்று உறுதியாயிருந்தார்கள்.

கிறிஸ்துவினுடைய அன்பு எப்படிப்பட்ட அன்பு? ஆம், அது தேடி வந்த அன்பு. நீங்கள் அவரை தெரிந்துகொள்ளவில்லை, அவர்தான் உங்களைத் தெரிந்துகொள்கிறார். நீங்கள் அவரை அசட்டை செய்து, புறக்கணித்து தள்ளினாலும் அவரோ உங்கள்மேல் பாசம் கொண்டிருக்கிறார். காணாமற்போன ஆட்டை தேடி கண்டுபிடிக்கிறதைப் போல உங்களை தேடி கண்டுபிடிக்கிறார்.

அவருடைய அன்பு உங்களுக்காக பரிதபிக்கும் அன்பு. மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்த மக்களைப் பார்த்து கிறிஸ்து பரிதபித்து மனதுருகினார் (மத். 9:36). மனதுருக்கத்தோடு ஒவ்வொரு அற்புதங்களையும் செய்து நிறைவேற்றினார். குஷ்டரோகிகளைக் கண்டபோது கூசாமல் அவர்களைத் தொட்டு குணப்படுத்தினார். மரித்த லாசருவை நினைத்து கண்ணீர் சிந்தினார். "யாரை நான் அனுப்புவேன்? யார் என் காரியமாய் போவான்? அறுவடை மிகுதியாய் இருக்கிறதே; வேலையாட்கள் கொஞ்சம் அல்லவா?" என்று சொல்லி அங்கலாய்த்தார். மாத்திரமல்ல. தம்முடைய ஊழியத்திலே தம்மோடுகூட இருக்கும்படி சீஷர்களையும் அவர் எழுப்பினார்.

அவருடைய அன்பு தம்மையே வெறுமையாக்கின அன்பு. உங்களுக்காக பரலோக மேன்மையைத் துறந்து பூமியில் இறங்கி வந்தாரே. தன்னுடைய மகிமை, வல்லமை, மகத்துவம், அதிகாரம், ஆளுகை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுக்காக தம்மைத்தாமே வெறுமையாக்கினாரே. அவருக்கு தலைசாய்க்க இடம் இல்லாதிருந்தது. இரவல் சத்திரம், இரவல் கழுதை, இரவல் கல்லறையே அவர் வாழ்க்கை. அப். பவுல் எழுதுகிறார், "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்" (பிலி. 2:6-8).

அவருடைய அன்பு பாடுகளை பொறுமையாய் சகித்த அன்பு. இயேசுவைப் போல உங்களுக்காக பாடுபட்டவர்கள் யாராவது உண்டா? நிந்தை, அவமானம், கசையடிகளை உங்களுக்காக  பொறுமையோடு சகித்தார். கெத்சேமனே தோட்டத்திலே இரத்த வியர்வை சிந்தி அவர் ஜெபித்தார். போர்வீரர்கள் அவருடைய கன்னத்திலே அறைந்தார்கள். கிறிஸ்து உங்களுக்காக  கடைசி சொட்டு இரத்தத்தையும் ஊற்றிக்கொடுத்தார். அவருடைய அன்பு தன் ஜீவனையே கொடுத்த அன்பு. தேவபிள்ளைகளே, உங்களை மறவாத அன்பை எப்போதும் எண்ணி தேவனை ஸ்தோத்தரிப்பீர்களா?

நினைவிற்கு:- "யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை" (ஏசா.44:21).