கிறிஸ்து மன்னித்ததுபோல!

"....கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (கொலோ. 3:13).

"கிறிஸ்து மன்னித்ததுபோல" என்று அப்போஸ்தலனாகிய பவுல் மன்னிப்புக்கு ஒரு முன்மாதிரியை சுட்டிக் காண்பித்து, நீங்கள் மன்னிக்கும்போது, கிறிஸ்து மன்னிக்கிறதுபோல மன்னித்து மறக்கவேண்டுமென்று குறிப்பிடுகிறார்.

கிறிஸ்து உங்களுடைய பாவங்களை மன்னிக்கிறார், மறக்கிறார். இது எத்தனை பெரிய பாக்கியம்! அவர் மன்னித்து மறக்கிறதினாலே நீங்கள் சாபத்திற்கு தப்புகிறீர்கள். நியாயத்தீர்ப்பிலிருந்து பாதுகாக்கப்படுகிறீர்கள். தேவபிள்ளைகளே, இவ்வளவு அன்பாக மன்னிக்க தயவு பெருத்தவரும், உங்களைக் கழுவி சுத்திகரிக்க தன்னுடைய இரத்தத்தையே ஊற்றிக்கொடுத்தவருமாகிய கிறிஸ்துவினிடத்தில் உங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்றுக்கொள்ள முழுமனதாய் முன்வாருங்கள்.

வேதம் சொல்லுகிறது, "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1யோவா.1:9). "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்" (சங். 103:12).

கிழக்குக்கும், மேற்கிற்கும் என்று கர்த்தர் சொல்லுகிறதை சிந்தித்துப் பாருங்கள். வடக்கிலும், தெற்கிலும் என்று அவர் எழுதவில்லை. ஏனென்றால், வடக்கே போனால் வடதுருவம் இருக்கிறது. இங்கிருந்து வடதுருவத்தின் தூரத்தை நீங்கள் அளந்துவிடலாம். தெற்கே போனால் தென்துருவம் இருக்கிறது. தென்துருவத்தின் தூரத்தையும் அளந்துவிடலாம். ஆனால் கிழக்கே போனாலோ அல்லது மேற்கே போனாலோ நீங்கள் முடிவில்லாமல் சென்று கொண்டேயிருப்பீர்கள். உலகம் உருண்டை வடிவமானதினாலே கிழக்கிலுள்ள தூரத்தை உங்களால் அளக்கவே இயலாது. அதுபோலவே கர்த்தர் உங்களுடைய பாவங்களை உங்களை விட்டு விலக்கி அவைகளை மறக்கிறார்.

ஒருமுறை ஒரு பூகோள ஆசிரியர் மிகவும் ஆழமான  கடல்களைக் குறித்துப் பேசிக்கொண்டு வந்தார். பசுபிக் மகா சமுத்திரம் ஐந்து மைல் தூரத்திற்கு மேலாக ஆழமானது என்று சொன்னபோது, ஒரு கிறிஸ்தவ மாணவன் "அல்லேலூயா" என்று சத்தமாய் ஆர்ப்பரித்தான். ஆசிரியர் திரும்பிப் பார்த்தார்.

அந்த மாணவன் சொன்னான், "சார், இயேசுகிறிஸ்து என்னுடைய பாவங்களை கடலின் ஆழத்தில் போட்டுவிட்டார் என்று வேதத்தில் நான் வாசித்தேன். பசுபிக் மகா சமுத்திரம் ஐந்து மைல் ஆழமுடையது என்று நீங்கள் சொன்னீர்கள். அவ்வளவு மகா ஆழத்தில் ஆண்டவர் எறிந்துவிட்டு, அதை எண்ணாமலும் இருக்கிற பாக்கியத்தை நினைத்து நான் ஆனந்த பரவசமடைகிறேன்" என்று சொன்னான்.

ஆம், ஆண்டவர் உங்களுடைய பாவங்களை மன்னிக்கிறார், மறக்கிறார்.  அதைப்போல நீங்கள் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களா? மறக்கிறீர்களா? சிலர் மன்னிக்கிறார்கள். ஆனால் மறப்பதில்லை. தங்களுடைய நினைவின் ஒரு மூலையில் அவர்கள் செய்ததை வைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். மற்றவர்களுடைய குறைகளை மன்னித்து மறக்கும்போதுதான் கிறிஸ்து உங்களில் வாசம்பண்ண மகிழ்ச்சியோடே இறங்கி வருவார். அவர் மன்னிப்பதில் தயவு பெருத்தவர் அல்லவா?  தேவபிள்ளைகளே, மன்னித்து மறப்பீர்களாக!

 நினைவிற்கு:- "ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (எபே. 4:32).