கர்த்தரின் தோட்டம்!
"கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்....அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார். சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்" (ஏசா. 51:3).
கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். உங்களை ஆற்றுகிறவர், தேற்றுகிறவர். இனி உங்களுடைய அழுகையெல்லாம் ஆனந்தக் களிப்பாய் மாறும். இன்று முதல் பசுமையான நாட்களை உங்களில் மனதுருகுகிற கர்த்தர் உங்களுக்குத் தருவார். கர்த்தர் உங்களை எப்படி ஆசீர்வதிக்கப் போகிறார்? அவர் உங்களை ஏதேனைப் போல மாற்றுவார். கர்த்தரின் தோட்டத்தைப்போல உங்களை அழகுறச் செய்வார். சந்தோஷமும், துதியும் கீதசத்தமும் உங்களில் உண்டாயிருக்கும்.
ஒருமுறை ஊட்டிக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள மலர்க் கண்காட்சியைப் பார்க்க நேர்ந்தது. எத்தனை அழகான மலர்களும், எத்தனை விதவிதமான நிறங்கள்! அவைகள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து மகிழ்வித்தன. சாதாரணமான ஒரு இடத்திலுள்ள மலர்களே அவ்வளவு அழகைத் தருமென்றால் கர்த்தருடைய தோட்டம் எத்தனை அழகாயிருக்கும்! ஏதேன் எத்தனை மகிழ்ச்சியுள்ள ஸ்தலமாயிருக்கும். ஆம், கர்த்தர் உங்களை ஏதேன் தோட்டத்தைப் போல மாற்றுவார்.
ஏதேன் தோட்டத்தின் சிறப்பு என்ன? அங்கே ஒவ்வொரு நாளும் தேவன் இறங்கி வருவார். பகலின் குளிர்ச்சியான வேளையிலே மனுமக்களோடு சஞ்சரிக்க அவர் இறங்கி வந்து உலாவுவார். அதுவே ஒரு பெரிய மகிழ்ச்சி. கர்த்தர் இறங்கி உலாவுவதினால் வனாந்தரமும், வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப் போலச் செழிக்கும் (ஏசா. 35:1).
ஏதேனின் அடுத்த சிறப்பு என்ன? அங்கே ஓடின அழகான நதி ஒரு சிறப்பான அம்சமாகும். அந்த நதி எங்கெங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் பொன் விளைந்தது. விலையேறப்பெற்ற கற்கள் விளைந்தன. அந்த நதியைக் குறித்து சங்கீதக்காரன் சொல்லும்போது, "ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், ...சந்தோஷிப்பிக்கும்" என்று சொல்லுகிறது (சங். 46:4).
அந்த நதி பரலோகத்திலிருந்து இறங்கி வருகிற நதி. அப்போஸ்தலர் யோவான் அந்த நதியை நோக்கிப் பார்த்தார். பளிங்கைப் போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி, தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை அவர் கண்டார் (வெளி. 22:1).
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களோடு நடந்து வருவது எத்தனை பாக்கியமானது! உங்களோடு மனமகிழ்ச்சியாயிருப்பது எத்தனை பாக்கியமானது.
ஏதேன் தோட்டத்தில் கர்த்தர் இருந்தார். பரிசுத்த ஆவியாகிய நதி இருந்தது. மாத்திரமல்ல இனிய கனிகள் தரும் விருட்சங்களும் இருந்தன. பார்வைக்கு அழகானதும், புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களும் அங்கே இருந்தது என்று வேதம் சொல்லுகிறது (ஆதி. 2:9).
பரிசுத்த ஆவியாகிய நதி ஓடும் போது அந்த நதியின் தண்ணீர் பாயும் இடமெல்லாம் ஆவிக்குரிய கனிகள் நிச்சயமாகவே உண்டாகும். தேவபிள்ளைகளே, கர்த்தர் தாமே உங்களை கனிகொடுக்கும் அனுபவத்திற்குள் வழி நடத்துவாராக! அல்லேலூயா!
நினைவிற்கு:- "கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக் களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேலிருக்கும்" (ஏசாயா 35:10).