கர்த்தரின் சத்தம்!

"அவர் (கர்த்தர்) அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்" (ஆதி. 22:1).

ஆபிரகாம் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு பழகியவர். கர்த்தருடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டவர். கர்த்தருடைய கரம் பிடித்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி நடந்தவர். ஒரு நாள் கர்த்தருடைய சத்தம் ஆபிரகாமுக்கு வந்தபோது, அது ஆபிரகாமுக்கு மிகப்பெரிய சோதனையாயிற்று. "உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போ, அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்" (ஆதி. 22:2).

இதைக் கேட்டபோது ஆபிரகாமுடைய உள்ளம் எவ்வளவு துடித்திருந்திருக்கும்! அந்த வேதனையை வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது. முதிர் வயதிலே பெற்றெடுத்த ஏகசுதனும் செல்லப்பிள்ளையும்தான் ஈசாக்கு. பதினாறு வயதுடைய இளம் வாலிபன்தான் ஈசாக்கு. அவன் ஏகசுதனும் நேசகுமாரனுமாயிருந்தான். அவனைப்போய் வெட்டி தகனப்பலியிடுவது எத்தனை வேதனையான காரியம்!

கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு பழகியிருந்த ஆபிரகாம் இப்போது பேசும் சத்தம் கர்த்தருடைய சத்தம்தானா அல்லது பிசாசின் சத்தமா என்று சந்தேகிக்கவில்லை. தான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிந்திருந்தார். அப்படியே தன் மகன் மரித்தாலும் கர்த்தர் அவனை உயிரோடு எழுப்ப வல்லமையுள்ளவர் என்று விசுவாசித்தார். கர்த்தர் சொன்னபடியே மோரியா மலைக்குச் சென்று, ஈசாக்கின் கை கால்களைக் கட்டி, பலிபீடத்தின் கட்டையின் மேல் கிடத்தினார். அப்போது கர்த்தருடைய சத்தம் மீண்டும் தொனித்தது. "பிள்ளையாண்டான் மேல் கையைப்போடாதே. அவனுக்கு ஒன்றும் செய்யாதே" என்றார்.

அந்த சத்தத்தை ஆபிரகாமும் கேட்டார். ஈசாக்கும் கேட்டான். இதுவரையிலும் கர்த்தருடைய சத்தத்தை ஆபிரகாம் மாத்திரமே கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இப்பொழுதோ முதன்முறையாக ஈசாக்கும் அந்தச் சத்தத்தைக் கேட்டான். ஈசாக்கினுடைய உள்ளம் எவ்வளவு சந்தோஷப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். அந்த சத்தம் தன்னுடைய உயிரைப் பாதுகாத்த சத்தம். தன்மேல் அக்கறையுள்ள சத்தம். அது முதற்கொண்டு ஈசாக்கும் கர்த்தருடைய சத்தத்தைக்கேட்க பழகிக்கொண்டான்.

ஆபிரகாமுடைய நன்றி நிறைந்த இருதயத்தைப் பார்க்கிலும், ஈசாக்கின் இருதயம் அதிக நன்றியால் நிரம்பியிருக்கும் என்று நான் எண்ணுகிறேன். ஆபிரகாம் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். அங்கே, தன் மகன் பலியிடப்பட வேண்டிய இடத்திலே தன்னைப் பலியாக்க ஆயத்தமாய் நிற்கிற ஆட்டுக்கடாவைக் கண்டான். அந்த ஆட்டுக்குட்டி எங்கே இருந்து வந்தது? பலிபீடத்தைக் கட்டும்போது அந்த ஆட்டுக்குட்டி அங்கே காணப்படவில்லையே, விறகுகளை அடுக்கும்போதும் அந்த ஆட்டுக்குட்டியை காணவில்லையே, தனக்குப் பதிலாக பலியாகும் அந்த ஆட்டுக்குட்டியைக் கண்டபோது, ஈசாக்கின் உள்ளம் நன்றியால் நிரம்பியிருந்திருக்கும்.

தேவபிள்ளைகளே, உலகத்தின் பாவ பாரங்களை சுமந்துத் தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை நோக்கிப் பாருங்கள். அவர்தான் இயேசுகிறிஸ்து. உங்களுக்காக கல்வாரி மலையிலே முள்முடி சூட்டப்பட்டு, கை, கால்கள் ஆணிகள் கடாவப்பட்டு தன்னை தியாகபலியாக ஒப்புக்கொடுத்தார். இதனால்தான் உங்களுக்கு இரட்சிப்பு வந்தது.

நினைவிற்கு:- "நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்..." (ஆதி. 22:18).