கிறிஸ்துவின் தழும்புகள்!

"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5).

"அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" என்பது எவ்வளவு ஆறுதலான செய்தி! உங்களை குணமாக்க இயேசுகிறிஸ்து தம்முடைய சரீரமெல்லாம் கொடிய தழும்புகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். "அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசா. 53:5), "அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" (1 பேதுரு 2:24) என்ற இந்த இரண்டு வசனங்களுக்கும் பெரிய வித்தியாசமுண்டு.

"அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" என்பது வியாதி வந்தபிறகு, "ஆண்டவரே உம்முடைய தழும்புகளுள்ள கரத்தை என் மேல் வைத்து என்னைக் குணமாக்கும்" என்று கெஞ்சிக் கேட்டு தெய்வீக சுகத்தைப் பெற்றுக் கொள்ளுவதாகும்.

ஆனால் "தழும்புகளால் குணமானீர்கள்" என்ற வார்த்தை இன்னும் ஆழமானது. இயேசு கிறிஸ்து சிலுவையிலே என்றைக்கு தழும்புகளை ஏற்றுக்கொண்டாரோ, அப்பொழுதே நான் தெய்வீக சுகத்தையும் ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொண்டேன் என்று அர்த்தமாகிறது. அது உங்களுக்குள்ளே மிகவும் பரிசுத்தமுள்ள விசுவாசமாக செயல்படுகிறது. இயேசு ஏற்கனவே என் நோய்களையும் வியாதிகளையும் சுமந்து விட்டார். ஆகவே நான் வியாதிப்படவோ, பெலவீனப்படவோ அவசியமில்லை. அவர் எனக்காக சிலுவையிலே சம்பாதித்து வைத்த தெய்வீக ஆரோக்கியத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று நீங்கள் விசுவாசித்து தெய்வீக ஆரோக்கியமுடையவர்களாக விளங்க வேண்டும்.

மீண்டும் அதை சுருக்கமாக உங்களுக்கு விளக்குகிறேன். ‘தழும்புகளால் குணமாகிறோம்’ என்பது வியாதி வந்து பிறகு கிடைக்கும் தெய்வீக சுகத்தைக் காண்பிக்கிறது. ‘தழும்புகளால் குணமானீர்கள்’ என்று சொல்லுவது விசுவாசத்தோடு தெய்வீக ஆரோக்கியத்தை பெற்றுக் கொள்ளுவதை காண்பிக்கிறது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இரண்டு காரணங்களுக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுகிறார்கள். முதலாவது, வியாதி வந்த பின்பு வியாதியின் அறிகுறிகளை மருத்துவரிடம் காண்பித்து, முழு பரிசோதனை செய்த பின்பு மருந்தைப்பெற்றுக் கொள்ளுகிறார்கள். அதே நேரத்தில் குழந்தைக்கு எந்த வியாதியும் இல்லாத போதும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுகிற பெற்றோருமுண்டு. "குழந்தை நன்றாகத்தானே இருக்கிறது. எதற்காக கொண்டு வந்தீர்கள்?" என்று மருத்துவர் கேட்கிறார். அதற்கு பெற்றோர்கள், "ஐயா எங்களுடைய ஊரில் காலரா நோய் நடமாடுகிறது. ஆகவே என் பிள்ளைக்கு அந்த நோய் வருவதற்கு முன்பாக தடுப்பு ஊசி போட வேண்டும்" என்று சொல்லுகிறார்கள்.

வியாதி வந்த பிறகு கொடுக்கப்படும் மருந்து நோயை குணமாக்குகிறது. வியாதி வருவதற்கு முன்பாக  கொடுக்கப்படும் மருந்து நோய் வராமல் தடுத்துவிடுகிறது. அது போலத்தான் ஏசாயா 53:5 இல் தெரிவிக்கப்படுவது வியாதி வந்த பிறகு கொடுக்கும் மருந்தாகும். 1 பேதுரு 2:24 இல் தெரிவிக்கப்படுவது வியாதி வருவதற்கு முன்பே தடுப்பு ஊசியாய் இருக்கிறது. தேவபிள்ளைகளே, நீங்கள் தெய்வீக சுகமும் ஆரோக்கியமும் பெற்றுக்கொள்ள வேண்டாமா? இயேசு கிறிஸ்துவின் தழும்புகளை தியானித்துப் பாருங்கள். அவைகளே உங்களுக்கு தெய்வீக சுகத்தையும், ஆரோக்கியத்தையும் தருகிறது.

 நினைவிற்கு:- "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத். 11:28).