கிறிஸ்துவின் வாழ்க்கையில்!
"உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்" (மத். 4:11).
இயேசுகிறிஸ்து மனிதனாய் இந்த பூமியில் வந்தபோது, தம்முடைய மகிமை, மாட்சிமை, மகத்துவம் ஆகிய எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அடிமையின் ரூபமெடுத்து தாழ்மையைத் தரித்தார். நம்மைப்போல மாம்சமும் இரத்தமும் உடையவராய் இருந்தார். அவர் தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டிருந்தார் (எபி. 2:9).
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் ஆரம்ப முதல் இறுதி வரையிலும் தேவதூதர்களின் பணிவிடை அவருக்கு இருந்ததை எல்லா சுவிசேஷங்களிலும் நீங்கள் காணலாம். இயேசுவின் பிறப்பின் போது, தேவதூதர்கள் வயல் வெளியிலே மேய்ப்பர்களுக்கு தரிசனமாகி, உற்சாகமாய் பாடல்களை பாடினார்கள். "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்" (லூக். 2:14).
ஏரோது குழந்தைகளையெல்லாம் கொலை செய்ய வகைதேடுகிறதை தேவதூதர்கள் அறிந்தபோது, உடனே யோசேப்புக்கு தரிசனமாகி, "ஏரோது பிள்ளையை கொலைசெய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்" (மத். 2:13). அப்படியே ஏரோது இறந்த பிறகு கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்திலே தரிசனமாகி பிள்ளையையும், அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு சொல்லும்படி கேட்டுக்கொண்டான்.
கிறிஸ்து நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து முடித்தபோது, சோதனைக்காரன் அவரை சோதனை செய்தான். அதன் பின்பு தேவதூதர்கள் வந்து கிறிஸ்துவுக்கு பணிவிடை செய்தார்கள். அது கிறிஸ்துவுக்கு எவ்வளவு உற்சாகமாய், மகிழ்ச்சியாயிருந்திருக்கும்! தேவதூதர்களின் பணிவிடையை கர்த்தர் வேண்டாமென்று ஒதுக்கவில்லை (மத். 4:11). இயேசு கெத்சேமனே தோட்டத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தியதாக வேதம் சொல்லுகிறது (லூக். 22 :43).
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுகிற நேரம் வந்தபோது, கர்த்தருடைய தூதன் இறங்கி வந்தான். கல்லறையை அடைத்திருந்த கல்லைப் புரட்டித் தள்ளி அந்தக் கல்லின் மேல் உட்கார்ந்தான் (மத். 28:2). காவலர்களால் தேவதூதனின் முகத்தை தரிசிக்கக்கூடாதபடி அவனுடைய முகம் அவ்வளவு பிரகாசமாயிருந்தது. ஆனால் மகதலேனா மரியாளும் மற்ற ஸ்திரீகளும் தேவதூதனிடம் தைரியமாய் பேசினார்கள்.
இயேசுகிறிஸ்து உயிரோடெழுந்து பரலோகத்திற்கு சென்றபோது, தேவதூதர்கள் சீஷர்களுக்கு காட்சியளித்து, "கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்" (அப். 1:11). தேவபிள்ளைகளே, இயேசுகிறிஸ்து தேவதூதர்களோடும், அவர்களுடைய ஆரவாரத்தோடும், எக்காள சத்தத்தோடும் வருவார். அந்த நாளில் கிறிஸ்துவையும், அவருடைய எல்லா தூதர்களையும் நீங்கள் கண்டு மகிழ்ந்து போற்றுவீர்கள்.
நினைவிற்கு:- "வலுவாத் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்" (மத். 24:31).