கர்த்தருடைய யுத்தம்!

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" (யாத். 14:14).

நீங்கள், எனக்காக யார் பேசுவார்கள், என்னுடைய நியாயத்தை யார் எடுத்துரைப்பார்கள், எனக்கு யார் நீதி செய்வார்கள் என்று கலங்காதேயுங்கள். கர்த்தர் இன்றைக்கு அன்போடு உங்களைப் பார்த்து, "மகனே, மகளே நான் உனக்காக வழக்காடி யுத்தம் செய்வேன்" என்று சொல்லுகிறார்.

இந்த கொடூரமான உலகத்தில் நீதி நியாயம் புரட்டப்படுகிறது. அநியாயமும் அக்கிரமமும் தலைவிரித்தாடுகின்றன. தீய மனுஷர் பல சதி ஆலோசனைகளால் சூழ்ச்சி செய்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘கர்த்தர் எனக்காக யுத்தம் செய்வார். எனக்காக யாவையும் செய்து முடிப்பார்’ என்கிற வார்த்தை இருதயத்தை எவ்வளவாய் மகிழ்விக்கிறது. தாவீது சொல்லுகிறார்  "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" (சங்.37:5).

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்ய வேண்டுமென்றால் சில நிபந்தனைகள் உண்டு. நீங்கள் உங்களுடைய பொறுப்பையும் கவலைகளையும் கர்த்தர் மேல் வைத்துவிட்டு இளைப்பாற வேண்டும்  என்பதே முதல் நிபந்தனை. நீங்கள் உங்களுக்காக யுத்தம் செய்து கொண்டிருந்தால் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்ய முடியாது. ஆகவேதான், “கர்த்தர் உங்களுக்கா யுத்தம் செய்வார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (யாத். 14:14) என்று வேதம் சொல்லுகிறது. சும்மா இருக்க வேண்டியது உங்களுடையக் கடமை. அநேகர் சும்மா இருக்காததினால் தான் காரியத்தையே கெடுத்து விடுகிறார்கள்.

அதே நேரத்தில் நீங்கள் கர்த்தரை நோக்கி இடைவிடாமல் கூப்பிட்டுக்கொண்டேயிருக்கவேண்டும். ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும். கர்த்தர் உங்களுக்காக எழும்பி யுத்தம் செய்கிற வரையிலும் நீங்கள் ஓய்ந்திருக்கவே கூடாது. கர்த்தர் இஸ்ரவேலருக்காக யுத்தம் செய்வதற்கு முன்பாக  அவர்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள் என்று யாத். 14:10-ல் வாசிக்கலாம். ஆபத்து அதிகமான அதே நேரத்தில் அவர்களுடைய விசுவாசமும் உறுதியாயிருந்தது. கடினமான பிரச்சனைகள், நெருக்கங்கள் மத்தியிலும் தங்களுக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக தங்கள் கண்களை ஏறெடுத்தார்கள்.

அன்றைக்கு யோசபாத் யுத்தக்களத்தில் கலங்கிய நிலையில் நின்றார். பகைவர்களை எதிர்த்து நிற்க திராணியில்லை. என்ன செய்வது? யோசபாத் செய்தது எல்லாம் கர்த்தரை நோக்கிப் பார்த்ததுதான். "எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது" (2 நாளா. 20:12) என்று கதறி ஜெபம் பண்ணினார். அப்பொழுது கர்த்தர் எழுந்தருளி யுத்தம் செய்து இஸ்ரவேலருக்கு சகாயம் பண்ணினார்.

தேவபிள்ளைகளே, அந்த கர்த்தர் இன்றும் மாறிப் போய் விடவில்லை. அவருடைய வல்லமை குன்றிப் போகவில்லை. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்கிறவர். அவர் ஓங்கிய புயத்தோடும், உயர்ந்த கரத்தோடும் உங்களைப் பாதுகாக்கவும், உங்களுக்காக அற்புதங்களைச் செய்யவும் எழுந்தருளியிருக்கிறார். சிங்கக்கெபியா? பயப்படாதேயுங்கள். கர்த்தர் சிங்கங்களின் வாயைக் கட்டிப் போடுவார். அக்கினி சூளையா? பயப்படாதேயுங்கள். அக்கினியின் உக்கிரத்தை மாற்றி உங்களோடுகூட அவர் உலாவுவார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விசுவாசத்தோடு கர்த்தரைத் துதிப்பதேயாகும். அப்பொழுது உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக உங்கள் தலையை உயர்த்தி எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுவார்.

நினைவிற்கு:- "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக" (சங்.138:8).