கர்த்தருடைய ஆலயம்!

"கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று" (2நாளா. 7:1).

எருசலேமில் இதுவரையிலும் மூன்று தேவாலயங்கள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. முதல் ஆலயத்தை கர்த்தருக்கென்று கட்டியது தாவீதின் குமாரனாகிய சாலொமோன்தான். அந்த ஆலய பிரதிஷ்டை நாளின்போது கர்த்தருடைய மகிமை அந்த ஆலயத்தை நிரப்பினது மாத்திரமல்ல, கர்த்தர் அந்த ஸ்தலத்தை ஆசீர்வதித்து "இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்" என்று உடன்படிக்கை சேதார் (2 நாளா. 7:15).

காலம் செல்லச் செல்ல ஜனங்கள் அந்த ஆலயத்தை மகிமைப்படுத்தினார்களேயொழிய கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுக் கொள்ளாமல் போனார்கள். பாரம்பரியங்களும், சடங்காச்சாரங்களும் நுழைந்தன. ஜனங்கள் விக்கிரக ஆராதனைக்குள் சென்று விட்டார்கள். சாலொமோன் தேவாலயத்தை பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து இடித்து, தரைமட்டமாக்கினான்.

பிறகு ஒரு ஆலயம் சேருபாபேலினால் அஸ்திபாரம் பண்ணப்பட்டது. அவனுடைய கைகளே அதை முடித்து தீர்த்தது (சகரி. 4:9). இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருந்த நாட்களில் கட்டப்பட்ட ஆலயம் ஏரோதுவினால் கட்டப்பட்டது. அதைக் கட்டி முடிக்க நாற்பத்தாறு ஆண்டுகள் சென்றன (யோவான் 2:20). அந்த ஆலயத்தில்தான் இயேசு பிரசங்கித்தார். கிறிஸ்துவினுடைய ஊழியத்தில் ஒரு பகுதி இங்கு இருந்தது. அதற்கு பின்பு அந்த ஆலயம் கி. பி. எழுபதாம் ஆண்டு தீத்து இராயனால் இடிக்கப்பட்டது.

சமீபத்தில் ஒரு ஆலயம் கட்டுவதற்கு உலகமெங்குள்ள யூதர்கள் முயற்சித்தார்கள். 1948-ம் ஆண்டு இஸ்ரவேலுக்கு சுதந்திரம் கிடைத்தபோதிலும்  எருசலேமில் தேவாலயம் இருந்த பகுதி அரேபியர்கள் கைகளிலே இருந்தது. 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் யுத்தத்தில் யூதர்கள் எருசலேமை அரேபியர் கைவசமிருந்து கைப்பற்றினார்கள். மட்டுமல்ல 10.6.1984-ல் மோரியா மலையிலுள்ள எருசலேம் பகுதியில் புதிய ஆலயத்திற்கு அஸ்திபாரமிட்டார்கள். அமெரிக்காவில் இருந்து வந்த யூதர்கள் மட்டும் அரை லட்சம் மில்லியன் டாலர்களை சேகரித்து கொடுத்தார்கள். ஆலயம் கட்டி எழுப்பப்பட்டது. அந்த ஆலயம் கர்த்தருடைய வருகையை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.

ஏசாயா சொல்லுகிறார், "கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள்" (ஏசா.2:2).

இன்னொரு முக்கியமான ஆலயத்தை குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. நீங்களே அந்த ஆலயம். வேதம் சொல்லுகிறது, "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"(1 கொரி.3:16).

தேவபிள்ளைகளே, உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியமானது கர்த்தருக்கு முன்பாக பரிசுத்த ஆலயமாய் கட்டி எழுப்பப்பட வேண்டும். வேத வாசிப்பிலும், ஜெபத்திலும், பரிசுத்தத்திலும் ‘தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியத்திலும்’ ஒவ்வொருநாளும் நீங்கள் கட்டி எழுப்பப்பட வேண்டியது அவசியம். தேவ ஆவியானவர் அதற்கு உதவி செய்கிறார்.

நினைவிற்கு:- "அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்" (எபே.2:22).